கிரிக்கெட்

INDvAUS – அவுட்டாக மறுத்த ஸ்மித்; சூப்பர் ரன்-அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பிய ஜடேஜா!

Published

on

இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் செய்தது. அந்த அணி 338 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 61 ரன்களுக்கு விக்கெட் எதுவும் இழக்காமல் விளையாடி வருகிறது. ரோகித் மற்றும் கில் இந்திய அணி சார்பில் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவுக்காக அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், சதமடித்து கெத்து காட்டினார்.

இதற்கு முன்னர் நடந்த இரண்டு போட்டிகளிலும் அவர் சொற்ப ரன்களில் அவுட்டாகி, பெவிலியன் திரும்பியதால், ஆஸ்திரேலியாவுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. பேட்டிங் ஃபார்முக்காக சிரமப்பட்டுக் கொண்டிருந்த ஸ்மித், நேற்று நம்பிக்கையுடன் களமிறங்கினார். ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தைக் கடைபிடித்த ஸ்மித், இன்று சதமடித்து அசத்தினார். இதன் மூலம் தன் பேட்டிங் ஃபார்மை திரும்பப் பெற்றுள்ளார் ஸ்மித். இது ஆஸ்திரேலிய பேட்டிங்கில் மேலும் வலு சேர்த்துள்ளது.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான வில் புகோஸ்கி, அரைசதம் கண்டார். அவருடன் இணைந்து ஜோடி போட்ட லாபுஷானே, 91 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை மிஸ் செய்தார். இவர்கள் இருவரைத் தவிர்த்து ஸ்மித் மட்டுமே ஆஸ்திரேலியா சார்பில் நிலைத்து ஆடினார். இன்னும் சொல்லப் போனால், 4வதாக களமிறங்கிய ஸ்மித், கடைசி வரை களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் சதமடித்தப் பின்னரும், இந்திய பவுலர்களின் பந்துகளை நாலா புறமும் சிதறடித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவருடன் விளையாடிய மற்ற அனைவரும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறிக் கொண்டிருந்தனர். குறிப்பாக கேம்ரோன் கிரீன், பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் ஆகியோர் டக்-அவுட்டாக ஸ்மித் மீது அழுத்தம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் ஸ்மித் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்காக ரன்கள் அடித்துக் கொண்டிருந்தார்.

கடைசி விக்கெட்டில் ஜாஷ் ஹேசல்வுட் உடன் விளையாடிக் கொண்டிருந்தார் ஸ்மித். அப்போது இந்தியாவின் சிறந்த ஃபீல்டரான ரவீந்திர ஜடேஜாவிடம் பந்தை தட்டிவிட்டு, சிங்கிள் எடுக்க முயன்றார் ஸ்மித்.

எப்போதும் ஃபீல்டிங்கில் புலியாக பாயும் ஜடேஜா, இந்த வாய்ப்பை விடவில்லை. ஸ்டம்பை ஹிட் செய்தால், ஸ்மித்தை வெளியேற்றலாம் என்று உணர்ந்த ஜடேஜா, பந்தை த்ரோ செய்தார். அது அவர் நினைத்தபடி ஸ்டம்பை பதம் பார்த்தது. முழு உடலையும் வளைத்து ஸ்மித் டைவ் அடித்தபோதும், அவரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் கிரீஸுக்குள் வர முடியவில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணியின் கடைசி விக்கெட்டாக அவர் வீழ்த்தப்பட்டார்.

ஒரு பக்கம் இந்தியப் பந்து வீச்சாளர்கள் ஸ்மித்தின் விக்கெட்டை எடுக்கத் திணறி வந்த நிலையில், ஜடேஜா அவரை ரன்-அவுட் செய்து வெளியே அனுப்பியது இந்தப் போட்டியின் முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது.

கீழே இருக்கும் வீடியோவின் கடைசி சில நோடிகளில் ஜடேஜாவின் சூப்பர் த்ரோ மூலம் ஸ்மித் ரன்-அவுட் ஆனதைப் பார்க்கலாம்:

seithichurul

Trending

Exit mobile version