இந்தியா

இந்தியாவை விட்டு வெளியேறும் பணக்கார இந்தியர்கள்.. கோல்டன் விசாவுக்கு விண்ணப்பித்த 5000 மில்லியனர்கள்

Published

on

புதுடெல்லி: நிறைய பணக்கார இந்தியர்களுக்கு பல நாடுகளில் வழங்கப்பட்டு வரும் கோல்டன் விசா திட்டம் கவர்ச்சிகரமானதாக இருப்பதால் முதலீடுகள் வழியாக பிற நாடுகளில் குடியேற விரும்பும் பணக்கார இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு பெருமளவில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டுத் திறமைகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே குறிப்பிடப் பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கும், திறமையானவர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டவர்களை ஈர்க்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டது தான் கோல்டன் விசா திட்டம். குறிப்பாக பெரிய முதலீட்டிற்கு பதிலாக இருப்பிடமும் குடியுரிமையும் இந்த விசா மூலம் வழங்க முடியும்.

இந்த விசா பெற விரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களை விட கொரோனா தொற்றுநோய் காலத்தில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக விசா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய சராசரி வளர்ச்சியை விட இது 50 சதவிகிதம் அதிகமாகும். ஏராளமான பணக்கார இந்தியர்கள் இந்த கோல்டன் விசா குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

இந்தியர்களின் தேவை மற்ற நாடுகளுக்கு எப்போதும் வலுவாக இருந்துள்ளது. ஆனால் இந்த கொரோனா காலத்தில் இந்தியர்கள் உட்பட உலகமுழுவதிலிருந்தும் தேவை அதிகரித்துள்ளது என்று இங்கிலாந்தின் லா விடா கோல்டன் விசாஸின் மார்க்கெட்டிங் மேனேஜர் எலிசபெத் எட்வர்ட்ஸ் கூறியுள்ளார்.

பெரு வணிகத்தில் முதலீடு செய்வதன் மூலமோ, அல்லது ரியல் எஸ்டேட் துறைக்கான சொத்துக்கள் வாங்குவதன் மூலமோ வெளிநாடுகளில் இருப்பிடம் மற்றும் குடியுரிமையை பெற இவர்கள் இந்த விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் அதிக நிகர மதிப்புள்ள தனி நபர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.

பல பணக்கார இந்தியர்களுக்கு சர்வதேச வணிகம் அல்லது ஐரோப்பா, இங்கிலாந்து அல்லது அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் குழந்தைகளின் கல்வி ஆகியவை இந்த கோல்டன் விசா பெற முயற்சிப்பதற்கான முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது.

உலகளாவிய செல்வ இடம்பெயர்வு மதிப்பாய்வின் தரவுகளின் படி, கடந்தாண்டு அதிகப்படியான பணக்கார தனி நபர்கள் வெளியே செல்லும் மூன்றாவது நாடாக இந்தியா இருந்துள்ளது, கிட்டத்தட்ட 5000 மில்லியனர்கள் அல்லது இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களின் எண்ணிக்கையில் 2% பேர் கடந்த 2020 இல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், போர்ச்சுக்கல் நாடு அதிக அளவில் கோல்டன் விசா திட்டத்தை வழங்குகிறது. ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்பும் இந்தியர்களிடையே இது மிகவும் பிரபலமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம் போர்ச்சுக்களில் கோல்டன் விசா வாங்குவதற்கான நுழைவு நிலை 280,000 அமெரிக்க டாலர் என்கிற நிலையில் உள்ளதால் ஐரோப்பிய திட்டங்கள் மிகவும் விலை உயர்ந்தவை என்பதையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருப்பினும், இந்தியர்களிடையே விருப்பமான நாடுகளாக நியூசிலாந்து, கரீபியன் தீவுகள், போர்ச்சுகல், மால்டா, ஸ்பெயின், சைப்ரஸ் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் உள்ளன. மேலும், மால்டா, சைப்ரஸ் மற்றும் கரீபியன் நாடுகளான செயின்ட் கிட்ஸ், ஆன்டிகுவா, கிரெனடா மற்றும் டொமினிகா போன்ற நாடுகளும் இந்திய குடிமக்களுக்கு இரண்டாவது பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கின்றன.

seithichurul

Trending

Exit mobile version