உலகம்

குடியரசு தினத்தில் வன்முறை.. தாய் நாட்டிற்கு ஆதரவு.. கனடாவில் இந்தியர்கள் நடத்திய பிரமாண்ட பேரணி

Published

on

வான்கூவர்: குடியரசு தினத்தன்று இந்தியாவில் விவசாயிகள் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையை கண்டித்து கனடா வாழ் இந்தியர்கள் மாபெரும் பேரணியை நடத்தினர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும் அதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை. இதற்கிடையே கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் தலைநகரை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது ஒருசில விவசாயிகள் டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்தனர். அப்போது சிலர் சீக்கிய மத சின்னங்களையும், காவி சின்னங்களையும், விவசாயிகளின் சங்க கொடிகளையும், வேறு சில கொடிகளையும், செங்கோட்டையின் சுவர்களில் ஏற்றி வைத்தனர். இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே அப்போது டெல்லி போலீசார் மற்றும் விவசாயிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு விவசாயி உயிரிழந்தார். இந்த நிகழ்வுக்கு பிறகு டெல்லியில் துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி எல்லைக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முடியாத வண்ணம் தற்காலிக சிமெண்ட் வெளிகளும் கூர்மையான ஆயுதங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து சர்வதேச பிரபலங்களும் இப்போது போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க தொடங்கியுள்ளதால் இந்த போராட்டம் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் தான் குடியரசு தினத்தன்று நடைபெற்ற நிகழ்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் இந்தியாவுக்கு தங்கள் ஆதரவை கொடுக்கும் விதமாகவும் கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மிகப்பெரிய பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். சர்ரேயில் உள்ள ஸ்ட்ராபெரி மலையிலிருந்து இந்தியத் துணைத் தூதரகம் வரை வான்கூவரில் இந்த யாத்திரை பேரணி நடத்தினர். இந்த பேரணியில் இந்தியா மற்றும் கனடா நாடு கொடியுடன் ஏராளமானோர் பங்கேற்றனர். பெரும் மக்கள் கூட்டத்தை தவிர, சுமார் 350 கார்கள் யாத்திரையில் பங்கேற்றன.

வந்தே மாதரம், ஜெய் ஜவான் மற்றும் ஜெய் கிசான், பாரத் மாதா கி ஜெய், எங்கள் மூவர்ணத்தை யாரும் அவமதிக்க விடமாட்டோம் போன்ற முழக்கங்களை போராட்டக்காரர்கள் அப்போது எழுப்பினர். கனடாவில் குடியேறிய இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டிற்கான தேசபக்தியைக் காண்பிப்பதற்காக சமீப காலங்களில் நடத்தப்பட்ட இரண்டாவது பேரணி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version