கிரிக்கெட்

INDvENG- “IPLல எல்லா டிரிக்ஸையும் ஷேர் பண்றது கிடையாது”- இங்கி., தொடருக்கு முன்னர் ரஹானே ஓப்பன் டாக்

Published

on

நாளை இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே, ‘ஐபிஎல் போட்டிகளில் நாங்கள் வெளிநாட்டு வீரர்களிடம் அனைத்து யுக்திகளையும் பகிர்ந்து கொள்வது கிடையாது. எனவே அதை வைத்து டெஸ்டில் எங்களை எதிர்கொள்ள முடியாது’ என்றுள்ளார்.

இது குறித்து அவர் விரிவாக கூறுகையில், ‘ஐபிஎல் போட்டிகளில் நாங்கள் எங்களுக்குத் தெரிந்த அனைத்து விஷயங்களையும் வெளிநாட்டு வீரர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. அப்படிச் செய்யாமல் இருப்பது முக்கியம் என்றும் நினைக்கிறேன். நாங்கள் இணைந்து பல கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவோம். அதே நேரத்தில் நாட்டுக்காக விளையாடும் போது, ஒரு அணியாக நீங்கள் எப்படி தனித் தன்மையுடன் செயல்படுகிறீர்கள் என்பது முக்கியம்.

பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்றோர் இங்கிலாந்துக்கு மிகச் சிறப்பான வீரர்களாக உள்ளனர். அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் பந்து வீசுவதும், டெஸ்ட் போட்டியில் பந்து வீசுவதும் வித்தியாசமாகத் தான் இருக்கும்.

இங்கிலாந்து ஒரு சமத்தன்மையுள்ள அணி. அவர்களை வீழ்த்துவதில் நாங்கள் கவனம் செலுத்துவோம்’ என்றுள்ளார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரஹானே, ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் ஒன்றாக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 5 ஆம் தேதி ஆரம்பிக்கிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதனால் இரு நாட்டு வீரர்களும் சென்னையில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் தான் இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்தது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா, 2 – 1 என்ற ரீதியில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. இதனால் இங்கிலாந்து தொடரில் இந்தியா, உத்வேகத்துடன் களமிறங்குகிறது.

Trending

Exit mobile version