இந்தியா

ரயில்களில் சிசிடிவி மற்றும் அபாய பட்டன்கள்: ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு!

Published

on

ரயில்களில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுமார் 15,000 ரயில் பெட்டிகளில் சிசிடிவிகள் மற்றும் அபாய பொத்தான்கள் பொருத்தப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

முதல்கட்டமான ராஜ்தானி எக்ஸ்பிரஸ், துரந்தோ மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் உள்ள 14, 387 பெட்டிகளும், EMU, MEMU மற்றும் DEMU போன்ற பயணிகள் ரயில்களிலும் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விரைவில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து ரயில்களிலும் சிசிடிவி மற்றும் அபாய பட்டன்கள் பொருத்தப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இதுவரை 2,930 ரயில் பெட்டிகளில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இன்னும் அதிகமாக சிசிடிவி மற்றும் அபாய பட்டன்கள் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனி உரிமை மீறல் இல்லாமல் பாதுகாப்புடன் பயணம் செய்வதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்தியாவில் இயங்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டிகளில் சிசிடிவி கண்காணிப்பு கதவுகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்படும் வீடியோக்கள், ரயில்வே அலுவலகத்தில் உள்ள பயிற்சி பெற்ற அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்றும் ஏதேனும் அபாயம் நேர்ந்தால் உடனடியாக அந்த ரயிலில் உள்ள டிடிஆருக்கு தகவல் கொடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயம் குறித்த தகவல்களை தெரிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு கோச்சிலும் குறைந்தபட்சம் இரண்டு அபாய பட்டன்கள் இருக்கும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களுக்கு ஆபத்து நேர்ந்தால் உடனடியாக அந்த பட்டனை அழுத்தினால் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு அபாய மணி ஒலிக்கும் என்றும் இதனை அடுத்து அடுத்த ரயில் நிலையத்திலேயே இதுகுறித்து விசாரணை நடக்கும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் அனைத்து பயணிகளும் பயணம் செய்ய வேண்டும் என்பதே ரயில்வே துறையின் நோக்கம் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version