தமிழ்நாடு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: கனமழை என எச்சரிக்கை!

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் சற்று முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தமிழகத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக நாளை முதல் 13-ஆம் தேதி வரை திருப்பூர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று முதல் வருகிற 13ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் வருகின்ற 11ம் தேதி வரை தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகள் , அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இன்று முதல் வருகிற 13-ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மேற்கூறிய பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version