இந்தியா

இனி இந்தியா வராமலே புதுப்பிக்கலாம்.. அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு வந்த நற்செய்தி

Published

on

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் இந்திய இந்திய வெளிநாட்டவர்கள் இனி இந்தியாவில் வழங்கப்பட்ட சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை (IDP) உள்நாட்டிலேயே புதுப்பித்துக்கொள்ள முடியும்.

இந்திய அரசாங்கம் கடந்தாண்டு மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டது, அதன்படி இந்தியர்கள் யாரேனும் வெளிநாடுகளில் இருக்கும் போதே அவர்களின் சர்வதேச ஓட்டுநர் உரிமம் (Permit ) காலாவதியாகிவிட்டால் அங்குள்ள இந்திய தூதரகங்கள் மூலமே அவற்றை புதுப்பித்துக்கொள்வதற்கான நடைமுறையை அறிவித்தது. இதற்கு முன்பு இப்படியான வழிமுறைகள் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து அபுதாபியில் இருக்கும் இந்திய தூதரகம் அங்கிருக்கும் இந்திய குடிமக்களுக்கு அவர்களுடைய சர்வதேச ஓட்டுநர் அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வசதி பிப்ரவரி 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் இந்த சேவையை வழங்க அனுமதிக்கும் இந்திய அரசாங்கத்தின் முடிவின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அபுதாபியில் இருக்கும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இந்த சேவையை பெற விரும்புவோர், வேலை நாட்களில் தூதரகத்தில் வந்து பெற்றுக்கொள்ளலாம். ஞாயிறு முதல் வியாழன் வரை காலை 08:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை தூதரகத்தில் இந்தியர்கள் புதுப்பித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வரலாறு படைத்த இந்திய மாணவி.. மாணவர் அமைப்புக்கான தேர்தலில் வெற்றி

சர்வதேச ஓட்டுநர் அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க செல்வோர், அவர்களின் பாஸ்போர்ட், இந்தியாவில் வழங்கப்பட்ட டிரைவிங் லைசன்ஸ், மற்றும் காலாவதியான சர்வதேச ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும். ஆவணங்களின் நேரடி சரிபார்ப்பிற்குப் பிறகு, விண்ணப்பதாரர்கள் முறையாக நிரப்பப்பட்ட இதர தூதரக சேவை படிவத்தை (EAP-II) சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்களுக்கும் ஐவிஎஸ் குளோபல் எனும் அவுட்சோர்சிங் நிறுவனம் மூலம் இதே சேவையை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அணைத்து பகுதியில் உள்ளவர்களுக்கும் ஒரே மாதிரியான ஆவணங்கள் மற்றும் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று தூதரக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Also Read: தந்தையால் சிறைவைக்கப்பட்ட துபாய் ஆட்சியாளரின் மகள்? ஆதாரங்களை கேட்கும் பிரிட்டன்.. என்ன நடக்கிறது?

எவ்வளவு செலவாகும்?

அவர்கள் தூதரக சேவைக் கட்டணமாக 40 திர்ஹம் மற்றும் இந்திய சமூக நல நிதியம் (ICWF) கட்டணமாக 8 திர்ஹம் வழங்க வேண்டும். விண்ணப்பதாரர் மத்திய அமைச்சகத்தின் பரிவஹான் இணையதள பக்கத்தில் இதற்காக வழங்கிய ரசீதுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும் மற்றும் அதே தளத்தில் தேவையான ஐடிபி கட்டணங்களையும் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைன் மூலம் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பிறகு, விண்ணப்பதாரர்களின் முகவரிக்கே நேரடியாக அவர்களின் புதுப்பிக்கப்பட்ட சர்வதேச ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் சென்று சேர்ந்துவிடும். இதில் அங்குள்ள தூதரகங்களின் பங்கு என்பது ஆவணங்களை சமர்பிப்பதற்கான வழிமுறையை எளிதாக்கப்பட்டுள்ளதே தவிர மற்ற விவரங்கள் அனைத்தும் இந்தியாவில் இருக்கும் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் மூலமே முறையாக மேற்கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version