விளையாட்டு

கோப்பையை என் கையில் கொடுத்தார் விராட் கோலி… தழுதழுத்த நடராஜன்..!

Published

on

இந்தியக் கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சாதனை மிகுந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்து உணர்ச்சிப் பெருக்குடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார்.

இந்தியக் கிரிக்கெட் அணியில் முதன் முறையாக நடராஜனுக்குக் கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது கிடைத்தது. வலைப்பந்து பயிற்சி பந்துவீச்சாளர் என அணிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்பஸ்ட்டிட்யூட் ஆகக் கூட விளையாட வாய்ப்புக் கிடைக்குமா என்பது நடராஜனுக்கே தெரியாது. அத்தகைய சூழலில் ஒரே சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி, டி20, டெஸ்ட் போட்டிகள் என அனைத்திலும் அறிமுகம் ஆக வாய்ப்பு கிடைத்தது.

இதன் மூலம் ஒரே சுற்றுப்பயணத்தில் அத்தனை ரக சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றா நடராஜன். கடந்த நவம்பர் மாதம் நடராஜனுக்கு முதல் குழந்தை பிறக்க, குழந்தையைக் கூடப் பார்க்க முடியாமல் ஐபில் போட்டிகள் நடைபெற்ற துபாயிலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவுக்குப் பறந்தார் நடராஜன். வெறும் முதல் சர்வதேச அறிமுக சாதனையை மட்டும் நிகழ்த்தாமல் தனது அதிரடியான விக்கெட் வேட்டையால் இந்திய அணிக்குக் கூடுதல் பலமாகவும் நின்றார் நடராஜன்.

சமீபத்தில் தான் நாடு திரும்பிய நடராஜனுக்கு அவரது சொந்த ஊரான சேலத்தில் கோலாகலமாக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று சேலத்தில் பிரத்யேக செய்தியாளர்கள் சந்திப்பில் நடராஜன் கலந்து கொண்டு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

நடராஜன் கூறுகையில், “என்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் எடுத்தது கனவுபோல் இருந்தது. கடின உழைப்பு ஒருவரை நிச்சயம் உயர்த்தும் என்பதற்கு இன்று நானே உதாரணமாக இருக்கிறேன். ஆஸ்திரேலியாவில் வெற்றிக் கோப்பையை கையில் ஏந்திய தருணம் மகிழ்ச்சியாக இருந்தது. வெற்றி பெற்ற போது ஒரு தொடரின் வெற்றிக் கொண்டாட்டத்தின் நடுவே வெற்றிக் கோப்பையை அந்தப் போட்டியின் கேப்டன் விராட் கோலி என் கையில் கொடுத்தார். அந்த கணம் நான் அழுதேவிட்டேன்.

ஆஸ்திரேலிய அணியில் இருந்த வார்னர் என்னை முழுவதுமாக ஆதரித்தார். எனக்கு மிகவும் ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தினார். எனக்குக் கடந்த நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. என்னைப் பொறுத்த வரையில் பிறந்த என் குழந்தையை பார்ப்பதைவிட நாட்டுக்காக விளையாடியதைத்தான் நான் மிகப் பெருமையாகக் கருதுகிறேன்” என்றார்.

Trending

Exit mobile version