கிரிக்கெட்

கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி: பரபரப்பான டி20 போட்டி!

Published

on

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்துள்ளது. இதன் மூலம் மேற்கிந்திய அணியை இந்த தொடரில் ஒயிட் வாஷ் செய்து அனுப்பியுள்ளது இந்தியா.

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.

ஆனால் கோப்டன் ரோஹித் ஷர்மா 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ஆனால் அவருடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷிகர் தவான் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோஹித் வெளியேறியவுடன் களத்துக்கு வந்த ரிஷப் பண்டும் சிறப்பாக ஆட இந்திய அணி வெற்றியை நோக்கி கம்பீரமாக நடைபோட்டது. கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு வெறும் 8 ரன்களே தேவைப்பட்டது.

ஆனால் 19-வது ஓவரில் இந்திய அணியால் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, அதே நேரத்தில் அந்த ஓவரில் ரிஷப் பண்ட் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அவர் 38 பந்துகளில் 58 ரன் சேர்த்தார். இதனையடுத்து இந்திய அணிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் இந்திய அணி 4 ரன் குவிக்க நான்காவது பாலில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. 5 வது பந்தில் ஷிகர் தவானும் ஆட்டமிழக்க இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் 1 ரன் தேவை என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இதனையடுத்து இந்திய அணி ஒரு ரன் எடுப்பதை தடுக்க வட்டத்திற்குள் ஃபீல்டிங் பலப்படுத்தப்பட்டது. லெக் ஸ்டெம்பை நோக்கி வீசப்பட்ட கடைசி பந்தை பந்துவீச்சாளரை நோக்கி தட்டிவிட்டார் மனிஷ் பாண்டே ஆனால் அதனை பந்துவீச்சாளர் பிடித்திருந்தால் ரன் அவுட் ஆக்கியிருக்கலாம். ஆனால் அவர் பந்தை தவறவிட அது ஒரு ரன்னாக மாறி இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது. இதனால் இந்திய அணி எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை கடைசி பந்துவரை எடுத்துச்சென்று த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது. ஆட்ட நாயகன் விருது 92 ரன்கள் எடுத்த ஷிகர் தவானுக்கும், தொடர் ஆட்ட நாயகன் விருது குல்திப் யாதவுக்கும் அளிக்கப்பட்டது.

seithichurul

Trending

Exit mobile version