கிரிக்கெட்

தோனி அபாரம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!

Published

on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ள நிலையில் தொடரை யார் கைப்பற்றுவார் என்பதை தீர்மானிக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியினரை ரன் குவிக்க விடாமல் திணற வைத்தனர். மைதானம் சுழல்பந்துக்கு சாதகமாக இருந்ததால் சாஹல் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார். 10 ஓவர்கள் வீசிய சாஹல் 42 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இறுதியாக ஆஸ்திரேலியா அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 231 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணியின் தாக்குதல் பந்துவீச்சால் இந்திய அணி ரன் எடுக்க சிரமப்பட்டாலும், விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 9 ரன்னிலும், தவான் 23 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்திய அணியின் கேப்டன் கோலியும், தோனியும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த கேப்டன் விராட் கோலி 46 ரன்னில் ஆட்டமிழக்க, கேதர் ஜாதவ் தோனியுடன் கைகோர்த்தார். இருவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு அணியை வெற்றிபெற வைத்தனர். இந்திய அணி 49.2 ஓவரில் 234 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தோனி, ஜாதவ் கூட்டணி 121 ரன் குவித்தது குறிப்பிடத்தக்கது.

தோனி 87 ரன்னுடனும் ஜாதவ் 61 ரன்னுடனும் களத்தில் இருக்க இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் போட்டி தொடரை 2-1 என கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது சாஹலுக்கும் தொடர் ஆட்ட நாயகன் விருது தோனிக்கும் வழங்கப்பட்டது. ஏற்கனவே இந்திய அணி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version