கிரிக்கெட்

இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: அஷ்வின் அசத்தல்!

Published

on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் தொடங்கியது. இந்த போட்டியின் மூன்றாம் நாளான இன்றே போட்டியின் முடிவு கிடைத்துவிட்டது. அபாரமாக விளையாடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றுள்ளது.

#image_title

பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத ஆஸ்திரேலிய அணி 63.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 77 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 312 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்திருந்தது. மூன்றாம் நாளான இன்றும் களமிறங்கிய இந்தியா 400 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் 223 ரன்கள் முன்னிலையில் உள்ள இந்திய அணி வலுவான நிலையில் இருந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 120 ரன்களும், அக்சர் பட்டேல் 84 ரன்களும், ஜடேஜ 70 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து உணவு இடைவேளைக்கு பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சீட்டுக்கட்டு போன்று சாய்த்தனர். அந்த அணி 32.3 ஓவர்களில் வெறும் 91 ரன்களின் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

சிறப்பாக பந்துவீசிய அஷ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறந்த பங்களிப்பை அளித்த ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Trending

Exit mobile version