கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவை சுருட்டிய இந்திய அணி: முதல் டெஸ்டில் வெற்றி!

Published

on

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இருபது ஓவர் போட்டி தொடரை சமன் செய்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முன்னிலை பெற்றுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய வந்தது. இந்திய அணி வீரர்கள் பலரும் மோசமான ஷாட்டை தேர்வு செய்து அடித்ததில் இந்திய அணி மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. புஜாராவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி ஓரளவுக்கு கௌரவமான ரன்னை குவித்தது. இறுதியாக முதல் இன்னிங்சில் இந்திய அணி 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக புஜாரா 123 ரன் எடுத்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியளித்தது. அந்த அணியில் ஹெட் அதிகபட்சமாக 72 ரன் எடுத்தார். இந்தியாவை சேர்ந்த அஸ்வின் மற்றும் பும்ரா 3 விக்கெட்டும் ஷர்மா மற்றும் ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 15 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 307 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணிக்கு 323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தனர். பொதுவாக ஆஸ்திரேலிய மண்ணில் சொதப்பும் இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியில் பொறுப்பாக ஆடினர். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 291 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் அஸ்வின், பும்ரா, ஷமி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது 194 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவிய புஜாராவுக்கு வழங்கப்பட்டது.

seithichurul

Trending

Exit mobile version