கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவை கதறவிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள்: அபார ரன் குவிப்பு!

Published

on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து வலுவான நிலையில் உள்ளது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அகர்வால் மற்றும் ராகுல் களமிறங்கினர். ராகுல் 9 ரன்னில் ஏமாற்றம் அளித்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அகர்வால் நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 77 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் புஜாரா தனது நங்கூரத்தை வலுவாக பாய்ச்சி இருந்தார். கேப்டன் கோலி 23 ரன்னில் ஆட்டமிழந்தாலும் புஜாரா தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பொறுமையை இரண்டு நாட்களாக கடுமையாக சோதித்த புஜாரா எதிர்பாராத விதமாக இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அவர் 193 ரன்களில் ஆட்டமிழந்தார். இருந்தாலும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி ஆட்டத்தில் சுவாரஸ்யத்தை கூட்டினார். தொடர்ந்து விகாரி, ஜடேஜா ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.

விஹாரி 42 ரன்னில் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இறுதி நேரத்தில் ஜடேஜாவும், ரிஷப் பண்டும் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஜடேஜா 81 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி 622 ரன்னில் 7 விக்கெட்டை இழந்திருந்தபோது டிக்ளேர் செய்தது. அப்போது ரிஷப் பண்ட் 159 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆட்ட நேர முடிவில் 10 ஓவருக்கு 24 ரன்கள் எடுத்து விக்கெட் எதுவும் இழப்பில்லாமல் களத்தில் இருந்தது. இந்த போட்டி டிராவில் முடிந்தாலும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதால் இந்தியா கண்டிப்பாக இந்த தொடரை கைப்பற்றும்.

seithichurul

Trending

Exit mobile version