கிரிக்கெட்
டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்திலும் நம்பர் 1 இடம் பிடித்த இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி அடைந்ததின் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 3 நாட்களில் முடிவடைந்தது. அந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோகித் ஷர்மா சதம் அடித்து அசத்தினார். சிறந்த ஆல் ரவுண்டர் பங்களிப்பை கொடுத்த ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த போட்டி முடிவடைந்த பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீரர்கள் மற்றும் அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அணிகளின் தரவரிசையில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஏற்கனவே இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற அபார வெற்றியின் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.
தற்போது அணிகளின் தரவரிசையில் இந்திய அணி டி20-இல் 267 புள்ளிகளுடனும், ஒருநாள் போட்டியில் 114 புள்ளிகளுடனும் டெஸ்ட்டில் 115 புள்ளிகளுடனும் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவிடம் முதல் டெஸ்டில் தோற்ற ஆஸ்திரேலியா 111 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 106 புள்ளி, நியூசிலாந்து 100 புள்ளி, தென் ஆப்பிரிக்கா 100 புள்ளி என அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.