விளையாட்டு

இந்தியா, பாகிஸ்தானுடன் மோதி தோற்கடிக்க வேண்டும்: சசி தரூர், கவாஸ்கர் கருத்து!

Published

on

புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் உலகக்கோப்பையில் மோதக்கூடாது எனவும், மோத வேண்டும் எனவும் பலதரப்பட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் கிரிக்கெட்டிலும் எதிரொலித்துள்ளது. இதனால் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டி கேள்விக்குறியாகி உள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங், ஜூன் 16-ம் தேதியன்று நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதுவதை தவிர்க்க வேண்டும். பாகிஸ்தானுடன் விளையாடாமலேயே இந்திய அணியால் உலகக்கோப்பையை கைப்பற்றக்கூடிய திறமை உள்ளது என்றார்.

இந்நிலையில் இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் அளித்த விளக்கத்தில், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுவது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். பாகிஸ்தானுடன் மோதுவதை தவிர்த்தால் இந்தியா புள்ளிகளை இழக்க நேரிடும். மேலும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வந்து இந்தியா மோதாவிட்டால் இந்தியா கோப்பையை இழக்க நேரிடும் எனவும் பிசிசிஐ தெரிவித்தது.

மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி கூறும் போது, இந்தியா கிரிக்கெட், ஹாக்கி என அனைத்துவிதமான விளையாட்டு உறவுகளையும் பாகிஸ்தானுடன் முறித்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் அதே நேரத்தில் இந்தியா பாகிஸ்தான் உடன் விளையாட வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர், பாகிஸ்தானுடன் விளையாடுவதை தவிர்ப்பதை விட அவர்களுடன் விளையாடி அவர்களை தோற்கடிப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என்றார். அதேப்போல இன்று காலை பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர், இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடி ஜெயிக்க வேண்டும். 1999 கார்கில் போருக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடி அவர்களை தோற்கடித்தது. அதுபோல இந்த முறையும் நடக்க வேண்டும், அவர்களுடன் விளையாடாமல் புறக்கணிப்பது என்பது போரிடாமலே தோற்றுப்போவது போல ஆகும் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version