கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான 20 ஓவர் போட்டி: தொடரை கைப்பற்றி அசத்தியது இந்தியா!

Published

on

இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியை இந்தியா ஏற்கனவே வென்றுள்ள நிலையில் நேற்றைய இரண்டாவது போட்டியையும் வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்றாவது போட்டி நாளை நடைபெறுகிறது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இரண்டாவது 20 ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மாவும் ஷிகர் தவணும் களமிறங்கினர். தொடக்கம் முதலே இவர்கள் ரன் சேர்ப்பில் ஈடுபட்டனர். தொடக்க வீரர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்தாலும் மிடல் ஆர்டர் பேட்ஸ் மேன்கள் வழக்கம் போல சொதப்ப இந்தியா மிகப்பெரிய ஸ்கோரை நிர்ணயிக்க முடியாமல் கவுரவமான இலக்கை நிர்ணயித்தது.

20 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் 167 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் தாமஸ், காட்ரெல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்பமே சொதப்பியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சுனில் நரேனும், லெவிஸும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், பின்னர் வந்த பூரான் மற்றும் பொவல் நிலைத்து நின்று ஆடினர்.

இந்த ஜோடியும் பிரிந்த பின்னர் 15.3 ஓவர்களில் மழை குறுக்கிட்டது. அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி 98 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்தது. இதனையடுத்து மழை விடாததால் டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா ஒரு போட்டி மீதமிருக்கு 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. 2 விக்கெட் வீழ்த்தி 20 ரன்னும் எடுத்த குருணால் பாண்டியா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மூன்றாவது போட்டி நாளை நடைபெறுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version