இந்தியா

60 மணி நேரம் நடந்த பிபிசி அலுவலக சோதனை முடிந்தது.. என்னென்ன ஆவணங்கள் சிக்கியது?

Published

on

பிபிசி டெல்லி மற்றும் மும்பை அலுவலகத்தில் கடந்த 60 மணி நேரமாக நடந்த வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் தேதி திடீரென வருமானவரித்துறை அலுவலர்கள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் சோதனை செய்து வந்தனர். சுமார் 60 முதல் 70 ஊழியர்கள் இந்த சோதனைகளில் ஈடுபட்டதாகவும் இரவு பகலாக இந்த சோதனை நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

சோதனை நடைபெறும் நேரத்தில் பிபிசி அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் அதேபோல் உள்ளே புதிய ஊழியர்கள் வர அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் வருமானவரித்துறை அலுவலர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு பிபிசி தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

பிபிசி ஊழியர்களின் செல்போன் மற்றும் லேப்டாப்கள் ஸ்கேன் செய்யப்பட்டதாகவும் அதில் பினாமி முறையில் பணம் அனுப்பப்பட்டதா? கருப்பு பணம் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்ட தாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 60 மணி நேரமாக நடந்த சோதனை முடிவுக்கு வந்ததை அடுத்து நேற்று வருமானத்துறை அதிகாரிகள் பிபிசி அலுவலகத்தில் இருந்து வெளியேறியதாகவும் அவர்கள் தங்களுடன் சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பிபிசி அலுவலகத்தில் சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள் என்னென்ன? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வருமானவரித்துறை அலுவலர்கள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிபிசி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் வருமானவரித்துறை அதிகாரிகள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள எங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறி உள்ளனர். நாங்கள் அதிகாரிகளுக்கு தொடர்ந்து முழு அளவில் ஒத்துழைப்பை அளிப்போம். விரைவில் எங்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம். நாங்கள் எங்கள் ஊழியர்களை தொடர்ந்து ஆதரித்து வருகிறோம். ஊழியர்களில் சிலர் நீண்ட கேள்விகளை எதிர்கொண்டுள்ளனர். ஒரே இடத்தில் மூன்று நாட்களாக தங்க வேண்டி இருந்தது, அவர்களின் நலனே எங்களுக்கு முன்னுரிமை. இப்போது எங்கள் அலுவலகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

மேலும் இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் எங்கள் பார்வையாளர்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version