தமிழ்நாடு

ஓபிஎஸ் தொகுதியில் அதிமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு!

Published

on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது என்பதும் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசியல்வாதிகள் ஒரு பக்கம் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் நிலையில் வருமான வரித்துறையினர் இன்னொரு பக்கம் அதிரடியாக வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் மகள் உள்பட பலரது வீடுகளில் சோதனை நடந்த நிலையில் இன்றும் அந்த சோதனை தொடர்கிறது. சற்று முன் வெளியான தகவலின்படி துணை முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.

அம்மா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி என்பவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டில் தேனி மாவட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்து வருவதாகவும் இந்த சோதனை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடருவதாகவும் தெரிகிறது.

அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் என்ற பகுதியில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம் என்பவர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. அவரது கேவி கோட்டை இல்லத்தில் வருமானவரித் துறையினர் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அது மட்டுமின்றி இன்னும் பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version