தமிழ்நாடு

சிறையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தலாம்: வருமான வரித்துறைக்கு அனுமதி!

Published

on

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் 9-ஆம் தேதி சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு, அலுவலகம் என சுமார் 189 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனை என கூறப்பட்ட இந்த சோதனை ஐந்து நாட்கள் நீடித்தது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து சசிகலாவின் சகோதரர் திவாகரன், ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமன், அவரது சகோதரிகள் விஷ்ணுபிரியா, ஷகிலா, ஆகியோரை வருமான வரித் துறை அதிகாரிகள் நேரில் அழைத்து விசாரனை நடத்தினர்.

பின்னர் போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை குறித்து விசாரணை நடத்த சசிகலாவை நேரில் ஆஜராகுமாறு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அப்போது தான் மௌன விரதத்தில் இருப்பதால் தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என சசிகலா பதில் அளித்தார்.

இந்நிலையில் சசிகலாவை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்துக்கு வருமான வரித் துறை கடிதம் எழுதியிருந்தது. இதனையடுத்து வரும் 13, 14 ஆகிய தேதிகளில் சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்திக்கொள்ள வருமான வரித் துறைக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. மேலும் இந்த விசாரணைக்கு 5 அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது சிறை நிர்வாகம்.

seithichurul

Trending

Exit mobile version