சினிமா செய்திகள்

இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோவில் தியானம் செய்ய அனுமதிக்கலாமா? விளக்கம் தரும்படி உயர்நீதிமன்றம் உத்தரவு

Published

on

இளையராஜா நீண்டகாலமாக ரிக்கார்டிங் தியேட்டராக பயன்படுத்தி வந்த பிரசாத் ஸ்டூடியோவின் ஓர் அரங்கம் அபகரிக்கப்பட்ட நிலையில், அந்த அரங்கில் தியானம் செய்ய இளையராஜாவை அனுமதிக்கலாமா என்று சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது..

சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டுடியோ உள்ளது. இங்குள்ள ஒரு அரங்கில் தான் இளையராஜா சுமார் 40 வருடங்களாக ரிக்கார்டிங் தியேட்டராக பயன்படுத்தி வந்தார். இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு அந்த இடத்தை வேறு தேவைக்காக பயன்படுத்த உள்ளதாக கூறி இளையராஜாவை அங்கிருந்து வெளியேறும்படி கூறிவிட்டனர்.

இந்த நிலையில், பிரசாத் ஸ்டியேவில் தன்னுடைய இசைத்தட்டுகள், விருதுகள், உடைமைகள் இருப்பதாகவும் அவற்றை எடுத்துக் கொண்டு வருவதற்கும், அங்கு ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்க பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரியும் இளையராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இளையராஜா பயன்படுத்திய அரங்கம் தற்போது சாப்ட்வேர் பணிகள் நடைபெறும் இடமாக மாற்றப்பட்டு விட்டதாகவும், இருப்பினும் இளையராஜாவின் உடைமைகள் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனை கேட்ட நீதிபதிகள் உரிமை அதிகாரம் என்பதைத் தாண்டி மனிதாபிமானத்தையும் பார்க்க வேண்டும் என்றனர். மேலும், பிரசாத்  ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்ய இளையராஜாவுக்கு அனுமதிக்கலாமா என்றும் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த பிரசாத் ஸ்டுடியோ தரப்பு வழக்கறிஞர், இது தொடர்பாக நிர்வாகத்திடம் கேட்டு சொல்வதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிரசாத் ஸ்டுடியோ அரங்கில் தியானம் செய்ய இளையராஜாவை அனுமதிப்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டனர்.

Trending

Exit mobile version