தமிழ்நாடு

அமைச்சர்களுக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரிகள்: தமிழக அரசியலில் பரபரப்பு!

Published

on

சில தினங்களுக்கு முன்னர் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா குடும்பத்துக்கு எதிராகவும், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என ஆவேசமாக பேசினார். இதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரும் ஆதரவு தெரிவித்தார்.

இந்த விவகாரம் அரசியல் மட்டத்தில் மட்டுமல்லாமல் ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரத்திலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள் நல சங்கத்தின் நிர்வாகக் குழு கூடி ஆலோசனை நடத்தியுள்ளது. அதில் ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக குற்றம்சாட்டிய அமைச்சர் சண்முகத்தையும், அவருக்கு ஆதரவளித்த அமைச்சர் ஜெயக்குமாரையும் கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அமைச்சர்களை அடக்கி வைக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்த உள்ளதாக முடிவு செய்துள்ளனர். இதனை ஒரு தீர்மானமாக நிறைவேற்றி அதனை முதல்வருக்கும், தலைமைச்செயலாளருக்கும் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சர்களுக்கு எதிராக அணி திரண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஊடகங்களிலும் விவாதமாக தற்போது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version