தமிழ்நாடு
எனக்கு முதல்வராகும் எண்ணம்?: கனிமொழி அதிரடி பேட்டி!
திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார் கருணாநிதியின் மகள் கனிமொழி. இவர் முதல்வர் ஆகும் எண்ணம் இருக்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு தற்போது பதில் அளித்துள்ளார்.
பெண்களுக்காக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறார் கனிமொழி எம்பி. பெண்கள் தொடர்பான, அவர்களின் முன்னேற்றத்திற்கான பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை கனிமொழி வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று சென்னை அடையாறில் FICCI நடத்திய கருத்தரங்கில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டார். அப்போது அவர் பெண்கள் முன்னேற்றம் குறித்தும் அவர்களது ஈடுபாடு குறித்தும் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கனிமொழி.
அப்போது கருத்தரங்கின்போது உங்களிடம் முதல்வராகும் எண்ணம் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த கனிமொழி, அவ்வாறான எண்ணம் நிச்சயம் இல்லை, டெல்லி அரசியல் என்பது பழக்கமான ஒன்று. அதனால் பழகின இடத்திலேயே பணியாற்ற விரும்புகிறேன் என்று பளிச்சென்று பதிலளித்தார்.