தமிழ்நாடு

சசிகலா விடுதலை எங்களுக்கு சந்தோஷம்: அதிமுக அமைச்சர் அதிரடி!

Published

on

கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பால் அவர் சிறைக்கு செல்ல நேரிட்டது. இதனால் தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தது. இந்நிலையில் அவர் விடுதலையானால் தங்களுக்கு சந்தோஷம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. மேலும் வழக்கு விசாரணையின் போது அவர் சிறையில் இருந்தது போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு இறுதியில் அவர் விடுதலை செய்யப்படலாம் என்ற தகவல் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது.

இந்நிலையில் நேற்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் சசிகலா விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், சசிகலாவை விடுதலை செய்வதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை. அவரை நாங்கள் சிறைக்கு அனுப்பவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கை தொடுத்து அவரை சிறைக்கு அனுப்பியது திமுகதான். பெண் என்னும் அடிப்படையில் சசிகலா சிறையிலிருந்து விடுதலையானால் நாங்கள் சந்தோஷப்படுவோம் என்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல அமைச்சர்கள் சசிகலா மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சசிகலாவின் விடுதலை சந்தோஷம் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version