வணிகம்

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்றாலும் கூகுள் பே, போன் பே பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.. எப்படி தெரியுமா?

Published

on

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்றாலும் கூகுள் பே, போன் பே மூலம் கடனில் பணம் செலுத்தும் வசதிக்கு அண்மையில் ஆர்பிஐ அனுமதி அளித்துள்ளது.

ஆர்பிஐ 2023-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், கூகுள் பே, போன் பே போன்ற யூபிஐ செயலி மூலம் பணம் செலுத்தும் போது வங்கி வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்க கிரெடிட் லைன் என்ற முறையை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

அதனால், வங்கி கணக்கில் பணம் இல்லாத போது யூபிஐ செயலி பயன்படுத்தி பரிவர்த்தனை செய்ய வாடிக்கையாளர் முயன்றால், அவரின் அனுமதியைப் பெற்று வங்கிகளால் கடன் வழங்க முடியும்.

யூபிஐ செயலி மூலமாக எளிதில் கடன் பெற கூடிய இந்த சேவையைப் பெற, வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குள்ள வங்கியை அணுக வேண்டும்.

முதற்கட்டமாக ஹெச்.டி.எப்.சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி நிறுவனங்கள் இந்த யூபிஐ கிரெடிட் லைன் சேவையைக் கொடுக்க ஆரம்பித்துள்ளன. ஹெச்.டி.எப்.சி யூபிஐ நவ் பே லேட்டர் மற்றும் ஐசிஐசிஐ பே லேட்டர் என இந்த சேவைகளுக்குப் பெயரிட்டுள்ளனர்.

ஹெச்.டி.எப்.சி வங்கியில் இந்த கிரெடிட் லைன் சேவையை ஆக்டிவேட் செய்ய 149 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கியில் பே லேட்டர் சேவைக்கு ஆக்டிவேட்டிங் கட்டணம் ஏதும் இல்லை என்றாலும் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.

இரண்டு வங்கிகளும் இந்த பே லட்டர் சேவை கீழ் 50,000 ரூபாய் வரை கடன் வழங்குகின்றன. ஆனால் குறிப்பிட்ட அளவு பணத்தைக் குறிப்பிட்ட காலத்தில் செலுத்தினால் வட்டி கிடையாது. குறிப்பிட்ட நாளை கடந்தால் வட்டி செலுத்த வேண்டும். வட்டி விகிதம் வங்கி நிறுவனங்கள் மற்றும் பிற விதிமுறைகளைப் பொருத்து மாறும்.

ஏற்கனவே கிரெடிட் கார்டு மூலம் யூபிஐ செயலிகளில் பணம் செலுத்தும் சேவையும் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி யூபிஐ செயலி மூலம் கடன் சேவை வழங்குவது எளிமையாக கடன் பெற உதவும் என்றாலும் அதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் வட்டி அதிகரிக்கும் சிக்கலும் உண்டும்.

Trending

Exit mobile version