உலகம்

திடீரென தடை விதித்த சவூதி அரேபியா.. நடுவழியிலேயே சிக்கிக்கொண்ட இந்தியர்கள்.. அடுத்து என்ன?

Published

on

ரியாத்: கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவ தொடங்கியதை அடுத்து சவூதி அரசாங்கம் மேலும் 20 நாட்டினர் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டதால் இந்தியர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் ஆரம்ப காலத்தில் ஊரடங்கு உத்தரவை மிக கடுமையாக பின்பற்றிய நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்று. மக்கள் வெளியே செல்வதில் இருந்து பிற நாட்டினர் உள்ளே நுழைவது வரை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். அங்கு வேலைக்கு சென்ற வெளிநாட்டினர் யாரேனும் விதிகளை மீறினால் உடனடியாக அவர்களுக்கான விசாக்கான அனுமதியை ரத்து செய்து நாட்டிற்கு திருப்பி அனுப்புவது, கடுமையான அபராதங்களை விதிப்பது என இருந்தது. இந்த நிலையில் தான் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியதை அடுத்து ஊரடங்கிலும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

குறிப்பிட்ட நாடுகளை தவிர மற்ற நாட்டினருக்கு சவூதிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கொரோனாவின் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளுக்கு மட்டும் தடை உத்தரவு தொடர்ந்தது. இந்தியாவில் இருந்து ஒருசில இடங்களில் இருந்து மட்டும் சவூதிக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் விடுமுறைக்கு இந்தியா வந்த அனைவராலும் மீண்டும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பலரும் துபாய் வழியாக சவூதி செல்ல திட்டமிட்டனர்.அதன்படி, தமிழகம் போன்ற மாநிலங்களில் இருந்து சவூதி அரேபியாவுக்கு நேரடி போக்குவரத்து இல்லாததால் இங்கிருந்து துபாய் சென்று அங்கு 15 நாட்கள் குவாரன்டைன் இருந்துவிட்டு துபாய் வழியாக சவூதி செல்ல திட்டமிட்டனர்.

அவ்வாறு புறப்பட்டு சென்றவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வந்து சேர்ந்தது அந்த அறிவிப்பு. கடந்த 3ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததையடுத்து மீண்டும் 20 நாடுகளுக்கு பயணம் செய்ய சவூதி அரேபிய அரசாங்கம் தடை விதித்தது. அந்த பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், அர்ஜென்டினா, ஜெர்மனி, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல், இந்தோனேசியா, ஜப்பான், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, சுவீடன், லெபனான், யுஏஇ மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் இருந்து சவூதிக்குள் நுழையவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

இப்போது துபாய் வழியாக சவூதிக்குள் நுழைந்து விடலாம் என இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்று அங்கு குவாரன்டைனில் இருந்தவர்கள் அங்கேயே சிக்கிக்கொள்ளும் நிலை உருவானது. வாய்ப்பு கிடைத்தோர் சவூதி எல்லை அடைக்கும் முன்னர் கிடைத்த வழிகளில் உள்ளே சென்றுவிட்டனர். மீதம் உள்ளவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மாட்டிக்கொண்டனர். அதில் பலருடைய விசா காலம் முடிவடையும் நிலையில் இருப்பதால் இந்தியாவுக்கு திரும்பி செல்லவும் முடியாமல் சவூதி அரேபியா உள்ளே நுழையவும் முடியாமல் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். இதன் காரணமாக பலருடைய வேலை பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version