ஆரோக்கியம்

ஆஸ்துமா எப்படி ஏற்படுகிறது? காரணங்கள் என்னென்ன? ஏற்ற மற்றும் ஏற்காத உணவு என்ன?

Published

on

உங்களுக்கு மூச்சு விடுவதில் சிரமமோ சிக்கலோ ஏற்பட்டால் அதுதான் ஆஸ்துமாவிற்கான முதல் அறிகுறியாகும். சில நேரங்களில் அதிக கூட்டம் உள்ள அல்லது நெரிசல் உள்ள இடங்களுக்கோ நாம் செல்லும்போது ஒருவிதமான மூச்சுத் திணறல் ஏற்படும். ஒரு சில நொடிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டாலே நம்மால் தங்க முடியாது. ஆனால் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் பல ஆண்டுகளாக இதன் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு இருக்கும். நுரையீரலில் உள்ள தசைகள் அதிக இறுக்கம் பெற்று மூச்சு குழாயானது வீக்கம் அடைந்து விடும். இந்த நிலை நாள்பட்ட மூச்சு அழற்சி, புகை பழக்கம், பருவநிலை மாறுபாடு, உணவு மாறுபாடு, இயற்கைச் சூழல் மாறுபட்டு மற்றும் மனநிலை மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடும். சிலர் இந்நோயால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி அவதிப்படுவர். ஆஸ்துமாவிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது பற்றி இங்கே விரிவாகக் காண்போமா?

ஆஸ்துமா எப்படி ஏற்படுகிறது?

How does asthma occur? What are the reasons? What should we eat during asthma?

ஆஸ்துமா என்பது நுரையீரலின் சுவாசக்குழல்களைப் பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோயாகும். சுவாசக்குழலில் ஒவ்வாமை ஏற்பட்டு அது வீக்கத்தை உண்டாக்கி பிறகு ஒருவகை சளி திரவம் நிறைந்து காற்று பரிமாற்றம் சீர்குலைந்து சுவாசக்கோளாறு ஏற்படுகிறது. இதனால் உடல் உறுப்புகளுக்குச் செல்லக்கூடிய பிராணவாயு (ஆக்சிஜன்) அளவு குறைந்து பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கு மிகுந்த சிரமத்துடன் காற்று பரிமாற்றம் நிகழும்போது விசில் போன்ற ஒலி உண்டாகும். பொதுவாக தூசு, புகை, அவற்றில் உள்ள சிறு துகள்கள் போன்றவை மூசுக் குழலில் படும்போது ஒருவித எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். இதனால் மார்பு மற்றும் வயிற்றில் உள்ள தசைகள் நுரையீரலிலிருந்து காற்றை வெளியேற்ற மூளையின் நரம்புகளைத் தூண்டுகிறது. இதனால் இருமல் ஏற்பட்டு அதிகம் ஆகி விரைவான சுவாசத்தின்போது விரைவான மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதுவே ஆஸ்துமாவாக உருமாறுகிறது.

ஆஸ்துமா ஏற்படக் காரணங்கள் என்னென்ன?

உண்ணும் உணவு, உடுத்தும் உடை ஆகியவற்றால் ஏற்படும் ஒவ்வாமை, புகைப்பிடித்தல் ஆகியவை நுரையீரல் தொற்றுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. மேலும் பருவநிலை மாறுபாடுகளான அதிக குளிர் காலத்திலும், கடுமையான கோடை காலத்திலும் ஏற்படும் உடலின் வெப்பநிலை மாற்றங்களும் காரணமாக அமைகின்றன. முந்தைய தலைமுறைகளிலிருந்து அடுத்த தலைமுறைக்குப் பரவும் தன்மையும் உண்டு.

நமது சுற்றுச்சூழல் புகை, தூசு, வாகனப்புகை, தொழிற்சாலை கழிவுகள் மற்றும் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு மட்டுமின்றி மனநிலை மாறுபாடுகளான கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, குழப்பம் போன்றவையும் இந்த நோய்க்கான சில காரணங்களாக அமைகின்றன. மேற்கண்ட காரணங்களால் ஒவ்வாமை ஏற்பட்டு, சளி, இருமல், தும்மல், மூக்கடைப்பு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆஸ்துமா ஏற்பட வழி வகுத்து விடும்.

ஆஸ்துமா வராமல் தவிர்க்கும் வழிமுறைகள் என்னென்ன?

உண்ணும் உணவு, உடுத்தும் உடை, உறங்கப் பயன்படுத்தும் படுக்கை, போர்வைகள் போன்றவற்றைத் தூய்மையாகக் கையாளுதல் வீடு, இருப்பிடம், சுற்றுப்புறச் சூழலைத் தூசி படியாமல் தூய்மையாகப் பார்த்துக் கொள்ளுதல், பயன்படுத்திய உணவுக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், குப்பை போன்றவற்றை உடனடியாக அகற்றுதல், மூக்கில் நெடி ஏற்றும் புகை பொருள்களைத் தவிர்ப்பதன் மூலம் ஆஸ்துமா வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் எவை?

மருந்துகளின் பங்கு ஒரு பக்கம் இருக்க உணவுப் பழக்க முறைகளே இந்நோய் வராமல் இருக்க முக்கிய துணையாக இருக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை உன்ன வேண்டியது அவசியம். பச்சைக் காய்கறிகள், விதைகள், முட்டை வெள்ளைக்கரு, பொன்னாங்கண்ணி, தூதுவளை, பசலை போன்ற கீரைகளும் நன்மை பயக்கும். நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. மஞ்சள், மிளகு, பெருங்காயம் போன்ற அஞ்சறைப்பெட்டி பொருள்களை உபயோகிப்பது அவசியம். எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

அதிக காரம், புளிப்பு, வாய்வு, அமிலம் கலந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதிக சூடும், அதிக குளிர்ச்சியும் உள்ள உணவுகளையும் தவிர்க்கலாம். பால், தயிர், மீன், திராட்சை, எலுமிச்சை போன்றவற்றை நோயின் வீரியம் குறையும் வரை தவிர்ப்பது நல்லது.
பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி நுரையீரலின் கொள்ளளவை அதிகரித்து நோய் தொற்றை நீக்கும். இது தவிர, கர்ப்பூரவள்ளி, கரிசலாங்கண்ணி போன்றவற்றைக் கசாயமாகப் பருகலாம். வெற்றிலை, மிளகு, துளசி, மஞ்சள், சுக்கு போன்றவற்றைக் கொதிக்கவைத்து குடிநீராகப் பருகலாம். யூக்கலிப்டஸ் எனப்படும் தில இலை, நொச்சி இலை போன்றவற்றைக் கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது நல்ல பலனைத் தரும்.

பச்சைக் கற்பூரம், ஓமம், திப்பிலி, மிளகு போன்றவற்றை இடித்துப் பொடியாகி பொட்டணமாகக் கட்டி முகர்ந்தால் சளி போன்ற சுவாசத் தொற்றுகள் வெளியேறும். எந்த வகை நோய் ஏற்பட்டாலும் உணவு மற்றும் வாழ்க்கை முறையும் தகுந்தாற்போல் மாற்றி மன நிலையை ஒருநிலைப்படுத்தினால் நோய்கள் பறந்தோடும்.

seithichurul

Trending

Exit mobile version