உலகம்

முன்பை விட மோசம்.. நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.. பிரிட்டனில் கோரத்தாண்டவம் ஆடும் உருமாறிய கொரோனா!

Hospitals in UK filled with new mutated covid-19 Patient

Published

on

லண்டன் : பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. கொரோனாவின் முதல் அலையை விட இந்த முறை அதிக அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் ஏற்பட தொடங்கி ஒருவருடம் நிறைவடைந்து விட்டது. இன்னமும் இதற்கு முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. பல உலக நாடுகளும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி இப்போதுதான் கொஞ்சம் மூச்சுவிட தொடங்கியுள்ளன. ஆனால் அதற்குள்ளாகவே கொரோனா வைரஸ் மியூட்டேட் அடைந்து இரண்டாவது அலையாக முன்பை விட வீரியத்துடன் பரவ தொடங்கியுள்ளன. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மருந்து நிறுவனங்கள் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன. பல நாடுகளும் ஒருசில நிறுவனங்களின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கி தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கிவிட்டன. பிரிட்டன் தான் உலகிலேயே முதலில் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் வழங்கிய நாடு.ஆனால் இப்போது அங்கு தான் உருமாறிய கொரோனாவின் பாதிப்பு அதிகம் உள்ளது.

இது புது கொரோனா கிடையாது?

முதலில் இப்போது பரவி வருவது புது கொரோனா கிடையாது, ஏற்கனவே இருந்த அதே வைரஸ் தான் மியூட்டேட் அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவ தொடங்கியதிலிருந்து பல்வேறு வகையில் மியூட்டேட் அடைந்திருக்கிறது, ஆனால் தற்போது பிரிட்டனில் பரவி வரும் இந்த வகை முன்பை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை பெற்றுள்ளது. இப்போது உருவாக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகளில் தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசி இந்த உருமாறிய கொரோனா வைரஸ்க்கு எதிராகவும் வேலை செய்யும் என ஆக்ஸ்போர்டு-ஆஸ்டெராஜெனகா நிறுவனம் மட்டுமே அறிவித்துள்ளன. மற்றவை இன்னமும் பரிசோதனை கட்டத்திலேயே உள்ளது. இதற்கிடையே உலகின் பல நாடுகளுக்கும் இந்த மியூட்டேட் அடைந்த கொரோனா வகை பரவ தொடங்கியதால் மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரத் தொடங்கிவிட்டன. இந்தியாவிலும் இதுவரை லண்டனில் இருந்து வந்தவர்களில் 6 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் புள்ளிவிவரங்களின்படி தற்போது ஒரே நேரத்தில் 20,426 நோயாளிகள் புதிதாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். இந்த எண்ணிக்கை கொரோனா உச்சத்திலிருந்த ஏப்ரல் மாதத்தில் கூட, 18,974 என்கிற அளவில் தான் இருந்துள்ளது. இங்கிலாந்து புயலின் பார்வைக்குள் மீண்டும் வந்துள்ளது என தேசிய சுகாதார சேவையின் தலைவர் சர் சைமன் ஸ்டீவன்ஸ் கூறினார். ஐரோப்பா மற்றும் இந்த நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலைக்குள் சென்றுள்ளோம். சாதாரணமாக நாம் கொண்டாடும் ஒரு ஆண்டின் இறுதிக்கட்டத்தில் நம்மில் நிறைய பேர் கவலை, விரக்தி மற்றும் சோர்வாக உணர்கிறோம் அதற்கு காரணம் நம்முடைய நண்பர்கள், உறவினர்கள், சக பணியாளர்கள் என பலரையும் இழந்திருக்கிறோம் என்றார். எவ்வாறாயினும், தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால், புத்தாண்டில் வசந்த காலத்தின் பிற்பகுதியில் அணைத்து விஷயங்கள் இயல்பு திரும்பத் தொடங்க வேண்டும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்து

மூன்று வாரங்களுக்கு முன்பு ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தின் முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு இந்த வாரம் இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு விரைவிலேயே மக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் மக்கள் தொடர்ந்து சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது, மாஸ்க் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில் முன்பை விட கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் வைத்திருப்பதை இப்பொது தான் அறிந்தோம். இது ஒன்றும் பயிற்சி அல்ல தயவுசெய்து எங்களை நம்புங்கள் என்று பிரிட்டனின் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சமந்தா பாட்-ராவ்டன் டிவிட்டரில் கூறியுள்ளார். தொடர்ந்து அதிகரிக்கும் இந்த புதிய கேஸ்களால் தேசிய சுகாதார சேவையின் மீது வைக்கப்படும் அதிகப்படியான அழுத்தங்கள் குறித்து குறிப்பிடும்பொழுது இதனை தெரிவித்தார். நாங்கள் களத்தில் பெரிய அச்சுறுத்தலோடு பணியாற்றுகிறோம், தேசிய சுகாதார சேவையின் அதிகாரிகளுக்குத் தடுப்பூசி விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை. இதனால் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறோம். இருப்பினும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பிரிட்டனில் 50,023 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. மார்ச், ஏப்ரல் மாதங்களில் இருந்த பாதிப்புகளை விட இவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வது இதன்மூலம் தெரியவந்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்த புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தில் உள்ள சுகாதார அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர். இதனால் பிரிட்டனில் உள்ள மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் சூழல் கூட உருவாகலாம். இப்படியான ஒரு சூழலில் இங்கிலாந்தில் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க வேண்டாம் என்றும் பல தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும் சுமார் 1,500 பணியாளர்கள் அணைத்து பள்ளிகளுக்கும் தேவையான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை தொலைபேசி மூலம் வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் பரிசோதனை நடத்தப்படும், இதற்காக 78 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன, பள்ளிகளுக்குத் தேவையான அணைத்து கருவிகளும் வழங்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version