தமிழ்நாடு

தேர்தலில் வென்றால் ‘இல்லத்தரசிகளுக்கு ஊதியம்’ எதற்காக..?- மய்யம் விளக்கம்

Published

on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தங்கள் கட்சி வென்றால், தமிழகத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்கும் திட்டம் அமல் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளதாவது, ‘பெண்கள் முன்னேற்றம்: பாரதியாரின் ‘புதுமைப் பெண்’ கனவை நிறைவேற்ற அனைத்து வித நடவடிக்கைகளையும் மக்கள் நீதி மய்யம் எடுக்கும். பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் தொடங்குதல் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தித் தர அதிக கவனம் செலுத்தப்படும். சம வாய்ப்பு வழங்குவதன் மூலம் பெண்கள், மக்கள் நீதி மய்யம் அரசுக்குக் கீழ் அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிவார்கள்.

அதேபோல இல்லத்தரசிகளுக்கும் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும். வீட்டில் அவர்கள் செய்யும் பணிகளுக்காக முறையான ஊதியம் கொடுக்கப்படும். இல்லத்தரசிகள் வீடுகளில் செய்யும் வேலை இதுவரை கண்டுகொள்ளப்படாமலும், ஊதியம் கொடுக்கப்படாமலும் உள்ளது. இது மாற்றியமைக்கப்படும். அதன் மூலம் அவர்களின் மாண்பு நிலைநிறுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் பற்றி பத்திரிகையாளர்கள் மத்தியில் கமல் பேசும்போது, ‘இந்த 7 அம்ச திட்டத்தில், தமிழகத்தில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தபடும் என்று நாங்கள் சொன்னால், அதை கிண்டல் செய்கிறார்கள். இதை மய்யத்தின் அரசு அமைந்தால் செய்து காட்டுவோம்.

இந்தத் திட்டத்திற்கு எங்கிருந்து நிதி வரும் என்று எங்களைக் கேள்வி கேட்கிறார்கள். நாங்கள் கட்டமைக்கும் ஊழலற்ற நேர்மையான அரசில் மக்களுக்கு நலத்திடங்களை செய்ய போதுமான நிதி கிடைக்கும். மக்களுக்கு செலவு செய்யாமல் எதற்காக அரசு நிதி. எல்லாவற்றுக்கும் ஊழலற்ற நேர்மையான அரசுதான் அடித்தளம். அந்த அடித்தளம் அமைந்துவிட்டால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்கும் திட்டம் உட்பட அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்திவிட முடியும். காரணம், இந்த அனைத்துத் திட்டங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது ஆகும்’ என்று கூறினார்.

 

 

 

Trending

Exit mobile version