இந்தியா

பெகாசஸ் உளவு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இந்து என்.ராம் வழக்கு!

Published

on

கடந்த சில நாட்களாக பெகாசஸ் உளவு விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்து வருகிறது என்பதும் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு இந்த விவகாரம் வெடித்தது என்பதையும் பார்த்தோம்.

எதிர்க்கட்சி தலைவர்கள் குறிப்பாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் சமூக ஆர்வலர்கள் உள்பட சுமார் 300க்கும் மேற்பட்டோர் பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த உளவுக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள் தெரிவித்த போதிலும் எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு இந்த விஷயத்தில் செயல்படவில்லை என்றால் இந்த உளவில் ஈடுபட்டது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை விட சக்தி வாய்ந்த ஒரு அமைப்பு இந்தியாவில் இருக்கிறதா என்றும் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த ஆணையம் ஒரு மாதத்திற்குள் இதுகுறித்து விசாரித்து முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அறிக்கை அளிக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது தற்போது பணியிலிருக்கும் நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்து என். ராம் மற்றும் ஏசியாநெட் நிறுவனர் சசிகுமார் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் பெகாசஸ் விவகாரம் மிகப்பெரிய அளவில் இந்தியாவில் பிரச்சனையாக உருவெடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version