தமிழ்நாடு

லதா ரஜினிகாந்துக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை – பின்னணி என்ன?

Published

on

ஆஸ்ரம் பள்ளி விவகாரத்தில் லதா ரஜினிகாந்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

ஶ்ரீ ராகவேந்திர கல்விச் சங்கம், சென்னையில் உள்ள கிண்டியில் ‘ஆஸ்ரம்’ என்கின்ற பெயரில் ஓர் பள்ளியை நடத்தி வருகிறது. இந்த கல்விச் சங்கத்தின் செயலாளராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த். கிண்டியில் செயல்பட்டு வரும் ஆஸ்ரம் பள்ளி வேறொருவர் நிலத்தில் அமைந்துள்ளது. இதற்காக ராகவேந்திர கல்விச் சங்கம் மாதந்தோறும் வாடகை செலுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடத்துக்கு சொந்தக்காரர்களுக்கு ராகவேந்திரா கல்விச் சங்கம் சார்பில் சரிவர வாடகை செலுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த சமயத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு, ஆஸ்ரம் பள்ளியின் கேட் திடீரென்று இழுத்து மூடப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டது. அதே நேரத்தில் வாடகைப் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. இப்படியான சூழலில் கடந்த 2018 ஆம் ஆண்டு இரு தரப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து சுமுகத் தீர்வு எட்டப்பட்டது. அதன்படி 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு இடத்தை காலி செய்துவிடுவதாக ராகவேந்திரா கல்விச் சங்கம் உத்தரவாதம் கொடுத்தது.

இப்படி எல்லாம் சரியாகும் தருணத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஏற்பட்டது. இதனால் குறித்த காலக்கெடுவுக்குள் இடத்தை காலி செய்ய முடியவில்லை என்றும், எனவே காலக்கெடுவை மேலும் ஓராண்டு நீட்டிக்க வேண்டும் என்றும் ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாளரான லதா ரஜினிகாந்த் சார்பில் உயர் நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் ராகவேந்திரா கல்விச் சங்கம், ‘மாத வாடகையை முறையாக செலுத்தி வருகிறோம். எனவே காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது. இதற்கு நீதிமன்றம், ‘காலக்கெடுவை நீட்டுத்து உத்தரவிடுகிறோம். 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்குகிறோம். அதற்குள் இடத்தை காலி செய்யவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாவீர்கள். மேலும், தற்போது பள்ளி இயங்கும் முகவரியில் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படக் கூடாது’ என்று உத்தரவிட்டது.

 

 

seithichurul

Trending

Exit mobile version