தமிழ்நாடு

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published

on

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்து சட்டமன்றத்தில் மசோதா இயற்றப்பட்டது என்பது தெரிந்ததே. அதன் அடிப்படையில் தற்போது கல்வி நிறுவனங்களில் மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டு முறைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆனால் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டனர். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி கல்வி நிலையங்கள் மற்றும் பணி நியமனங்கள் செய்யலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு பணி நியமனங்கள் கட்டுப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அன்றைய தினம் மற்றும் அதற்கு பின்னர் ஓரிரு நாட்கள் இறுதி விசாரணை செய்யப்படும் என்றும் அதனை அடுத்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே இப்போதைக்கு வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துள்ளது தற்காலிக வெற்றியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இறுதி தீர்ப்பு வந்த பின்னர்தான் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு உண்டா? இல்லையா? என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version