வணிகம்

HDFC வங்கி கிரெடிட் கார்டு விதிகளில் முக்கிய மாற்றங்கள்! ஆகஸ்ட் 1 முதல் வரும் இந்த புதிய விதிகள் பற்றித் தெரியுமா?

Published

on

HDFC வங்கி ஆகஸ்ட் 1, 2024 முதல் அதன் கிரெடிட் கார்டு விதிகளில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதுப்பிப்புகள் பல்வேறு வகையான பரிவர்த்தனைகள் மற்றும் கிரெடிட் கார்டுதாரர்களுக்கான கட்டணங்களைப் பாதிக்கும்.

வாடகை பரிவர்த்தனை

முக்கிய மாற்றங்களில் ஒன்று, பேடிஎம், கிரெட், மோபிக்விக், செக் போன்ற மூன்றாம் தரப்பு கட்டண பயன்பாடுகள் மூலம் செய்யப்படும் வாடகை பரிவர்த்தனைகளுக்கு 1% கட்டணம் விதிக்கப்படும். இந்த கட்டணம் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.3,000 என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்த பிரபலமான பயன்பாடுகளைப் பயன்படுத்தி வாடகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் செலவாகும்.

பில் கட்டணங்கள்

HDFC கிரெடிட் கார்டு பயன்படுத்தி ரூ.50,000-க்கும் குறைவான பரிவர்த்தனை செய்யும் போது கட்டணம் ஏதும் கிடையாது. அதுவே அதற்கு அதிகமாகச் செய்யும் போது 1 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும். அதிகபட்சமாக ரூ.3000 வரை கட்டணம் விதிக்கப்படும்.

இன்சூரன்ஸ் கட்டணங்கள்

இன்சூரன்ஸ் கட்டணங்கள் செலுத்தும் போது அதற்கு இந்த கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படாது.

பெட்ரோல், டீசல் கட்டணம்

HDFC கிரெடிட் கார்டு பயன்படுத்தி ரூ.15,000 அதிகமாக பெட்ரோல் மற்றும் டீசல் கட்டணம் செலுத்தும் போது 1 சதவீதம் என அதிகபட்சம் 3000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

கல்விக் கட்டணங்கள்

கிரெட், பேடிம் அல்லது பிற செயலிகள் பயன்படுத்தி கல்வி கட்டணம் செலுத்தும் போது 1 சதவீதம் என அதிகபட்சமாக 3000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். இதுவே பிஓஎஸ் இயந்திரங்கள் மூலம் செய்யும் போது எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. வெளிநாட்டுக் கல்விக் கட்டணங்களும் இதில் அடங்கும்.

சர்வதேச பரிவர்த்தனைகள்

HDFC கிரெடிட் கார்டு பயன்படுத்தி சர்வதேச பரிவர்த்தனைகள் செய்யும் குறுக்கு நாணய பரிவர்த்தனைகளுக்கும் 3.5% மார்க்அப் கட்டணத்தை விதிக்கும். இது அடிக்கடி வெளிநாட்டில் கொள்முதல் அல்லது கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களைப் பாதிக்கும்.

தாமதமாக கிரெடிட் கட்டணம்

கிரெடிட் கார்டு கட்டணத்தைத் தாமதமாக செலுத்தும் போது 100 முதல் 300 ரூபாய் வரை என உள்ள அபராத கட்டணத்தை, செலுத்த வேண்டிய தொகையைப் பொருத்து கூடுதலாக வசூலிக்கப்படும். அதனால் சரியான நேரத்தில் கட்டணத்தைச் செலுத்த வாடிக்கையாளர்கள் முன்வருவார்கள் என வங்கி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

வெகுமதி புள்ளிகள்

கிரெடிட் கார்டு கட்டணங்களைச் செலுத்தும் போது வழங்கப்படும் கேஷ்பேக் அல்லது வெகுமதி புள்ளிகளை 50 ரூபாய் கூடுதலாக வழங்க முடிவு செய்துள்ளது.

ஈஸி ஈஎம்ஐ

ஈஸி ஈஎம்ஐ வசதியைப் பயன்படுத்தி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் பொருட்கள் வாங்கிவிட்டு, அதனைத் தவணை முறையில் செலுத்த ஈஸி ஈஎம்ஐ முறையைப் பயன்படுத்தும் போது 299 ரூபாய் செயலாக்கக் கட்டணம் வசூலிக்கப்படும்.

டாட்டா நியூ

HDFC வங்கி டாட்டா நியூ இன்பினிட்டி மற்றும் டாட்டா நியூ பிளஸ் கிரெடிட் கார்டுதாரர்களுக்கான வெகுமதி புள்ளிகள் கட்டமைப்பையும் புதுப்பித்துள்ளது. டாட்டா நியூ இன்பினிட்டி HDFC வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் டாட்டா நியூ UPI ஐடி மூலம் செய்யும் தகுதி வாய்ந்த UPI பரிவர்த்தனைகளுக்கு 1.5% நியூ காயின்களைப் பெறுவார்கள், மற்ற தகுதி வாய்ந்த UPI ஐடிகளுடன் பரிவர்த்தனைகளுக்கு 0.50% நியூ காயின்களைப் பெறலாம்.

டாட்டா நியூ பிளஸ் HDFC வங்கி கிரெடிட் கார்டுதாரர்கள் டாட்டா நியூ UPI ஐடி மூலம் தகுதி வாய்ந்த UPI பரிவர்த்தனைகளுக்கு 1% நியூ காயின்கள் மற்றும் மற்ற தகுதி வாய்ந்த UPI ஐடிகளைப் பயன்படுத்திச் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு 0.25% நியூ காயின்களைப் பெறுவார்கள்.

seithichurul

Trending

Exit mobile version