தமிழ்நாடு

தேர்தலன்று தனியார் நிறுவனங்கள் ஊதியத்துடன் விடுப்பளிக்கவில்லை என்றால்…- நீதிமன்றம் கறார் உத்தரவு!!!

Published

on

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து மே 2 ஆம் தேதி அனைத்துத் தொகுதிகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே மீதம் இருப்பதால் அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்று தனியார் செய்தி நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக திமுக தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் தேர்தல் நாளான ஏப்ரல் 6 அன்று, அரசு துறைகளுக்கும் நிறுவனங்களுக்கும் விடுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள், அன்று ஊதியத்துடன் விடுப்பு கொடுக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 

சேலத்தைச் சேர்ந்த அஹமது ஷாஜகான் என்பவர் பொதுநல வழக்கை ஒன்றைத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், 100% வாக்கை ஊக்குவிக்க, அனைவரும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல விழிப்புணர்வு பிரச்சாரங்களைச் செய்து வருகிறது. வாக்களிப்பதை ஊக்குவிக்க அன்றைய தினம் விடுமுறை தினமாக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், அரசு சாராத தனியார் நிறுவனங்கள் அரசின் உத்தரவை மதிப்பதில்லை. தேர்தலில் வாக்களிக்க அரசு அளித்த விடுமுறையை அளிப்பதில்லை. ஊழியர்கள் வாக்களிக்க அனுமதிக்கும் வகையில், ஊதியத்துடன் விடுமுறை வழங்குவதில்லை. வாக்குப்பதிவு தினத்தன்று தனியார் நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பை அளிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார். 

இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ‘தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக, ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்கும் தனியார் நிறுவன ஊழியர்களின் உரிமை குறித்து விளம்பரப்படுத்தும் வகையில் அறிவிக்கை வெளியிட வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுகிறோம்.

மேலும், இது சம்பந்தமான சட்டவிதிகளை மீறும் தனியார் நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அந்த அறிவிக்கையில் எச்சரிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது. 

seithichurul

Trending

Exit mobile version