கிரிக்கெட்

100வது டெஸ்டில் விளையாடும் இஷாந்த் சர்மா; இந்திய அணியில் அவர் முதன்முறை தேர்வானபோது கோலி செய்த காரியம்

Published

on

இன்று இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடக்கிறது. இது இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பங்கேற்கும் 100வது டெஸ்ட் போட்டியாகும்.

இஷாந்த் சர்மாவும் கேப்டன் விராட் கோலியும் டெல்லியைச் சேர்ந்தவர்கள். இருவரும் சிறு வயது முதல் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். இந்நிலையநில் இந்திய அணிக்கு இஷாந்த் சர்மா முதன்முறையாக தேர்வு செய்யப்பட்ட போது, அந்தச் செய்தியை கோலி தான், அவருக்குத் தெரிவித்துள்ளார். அந்த அனுபவம் குறித்த சுவாரஸ்யத் தகவலைத் தற்போது பகிர்ந்துள்ளார் கோலி.

‘என்னுடன் சேர்ந்து தான் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளை விளையாடத் தொடங்கினான் இஷாந்த். அவன் இந்தியாவுக்கு முதல் முறையாக தேர்வான போது, மதிய நேரத்தில் அந்தச் செய்தி வந்தது. அப்போது இஷாந்த், தூங்கிக் கொண்டிருந்தான். நான் தான் அவனைக் காலில் எட்டி உதைத்து எழுப்பினேன். நான் தான் முதலில் அவனுக்கு அந்த மகிழ்ச்சி கரமான செய்தியைத் தெரிவித்தேன். நாங்கள் இருவரும் அந்தளவுக்கு நெருக்கமான நண்பர்கள். எங்கள் இருவருக்கும் இடையில் அப்படியான உறவுப் பாலம் உள்ளது.

எங்கள் இருவருக்கும் இடையில் நம்ப முடியாத வகையிலான ஒரு நம்பிக்கை உள்ளது. அவன் இப்படியான வெற்றிகளைக் குவிப்பதையும் சாதனைகளை நிகழ்த்தியதையும் அருகில் இருந்துப் பார்த்தது மிக்க மகிழ்ச்சி.

தற்கால கிரிக்கெட்டில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது சாதாரண காரியம் அல்ல. குறிப்பாக ஒரு வேகப் பந்து வீச்சாளருக்குத் தன் உடல் தகுதியைத் தொடர்ந்து சரி வர வைத்திருப்பது என்பது மேலும் சவாலான காரியம் ஆகும்.

இஷாந்த், கண்டிப்பாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிக கவனம் செலுத்தி இருக்கலாம். ஆனால், அவன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தான் என்பது குறிப்பிடத்தக்கது’ என்று நெகிழ்ச்சிப் பூர்வமாக பாராட்டுகளைத் தெரிவித்து இஷாந்த் ஷர்மா குறித்து சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார் கோலி.

 

seithichurul

Trending

Exit mobile version