தமிழ்நாடு

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட எச்.ராஜா!

Published

on

நீதிமன்றத்தை அவதூறாக மோசமான வார்த்தைகளில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அது தொடர்பான வழக்கில் இன்று நேரில் ஆஜராகினார். எச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜராவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதிக்காத காவல்துறையையும், நீதிமன்றத்தையும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டினார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் எச்.ராஜா மீது வழக்குகள் பதியப்பட்டது.

ஆனால் தமிழக காவல்துறை கடைசி வரை எச்.ராஜாவை கைது செய்யவில்லை. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம் அமர்வு எச்.ராஜா மீது தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து, அவருக்கு நோட்டிஸ் அனுப்பியது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. இதனையடுத்து இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்த எச்.ராஜா நீதிபதி சி.டி. செல்வம், நிர்மல்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு 10 மணியளவில் ஆஜரானார்.

அப்போது, எச்.ராஜா தரப்பில் வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆஜராகி மனு அளித்தார். அதில், நீதிமன்றத்தை அவதூறாக பேசியது உண்மை தான். காவல்துறையிடம் வாக்குவாதம் செய்தபோது கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாகவும், இதனால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் கூறியிருந்தார்.

இதனையடுத்து எச்.ராஜா மன்னிப்பு கோரியதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

seithichurul

Trending

Exit mobile version