தமிழ்நாடு

‘அனைவருக்கும் அரசு வேலையே எங்கள் லட்சியம்’- சீமான் சொல்லும் திட்டம்

Published

on

மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் அரசு வேலையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே தங்களின் திட்டம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

உசிலம்பட்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட சீமான் கூறியதாவது:-

‘எள்ளில் இருந்து தயாரிப்பது நல்லெண்ணெய். அந்த எள்ளை வைத்து எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலையில் படிக்காதவர்களுக்கு அரசு வேலை. அதே தொழிற்சாலையில் படித்து, சாப்ட்வேர் படித்த இளைஞர்களுக்கு கணக்குப் பார்க்கும் வேலை, அதை நிர்வகிக்கும் வேலை. எள்ளை வைத்துப் புண்ணாக்குத் தயாரிப்பது, எள்ளை வைத்து மிட்டாய் தயாரிப்பதற்குத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். அந்த தொழிற்சாலையில் பணி செய்ய படிக்காதவர்களுக்கு அரசு வேலை. படித்தவர்களுக்கு அதை நிர்வகிக்கும் வேலை. இப்படி அனைவருக்கும் அரசு வேலை கொடுப்பது தான் எங்களின் லட்சியம்.

இப்போது இருப்பவர்கள் உங்களை ஏமாற்ற வந்திருக்கிறார்கள். நான் இப்போது இருக்கும் அத்தனையையும் மாற்ற வந்திருக்கிறேன். இது தான் எனக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம். இப்படி அனைத்துக்கும் விவசாயம் செய்ய என் மக்களிடத்திலேயே நிலத்தைக் கேட்பேன். அவர்களிடம் 25 ஆண்டுகளுக்கு நிலத்தைக் குத்தகைக்கு வாங்குவேன். 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நான் உயிரோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும், திட்டம் தொடரும்.

மக்கள் வேண்டுமென்றால் நிலத்தை மீண்டும் குத்தகைக்குக் கொடுக்கலாம். இல்லையென்றால் மீண்டும் தங்களது நிலத்தை அவர்களே வைத்துக் கொள்ளலாம். இதைப் போன்று அனைத்து தரப்பும் வளர்வதற்கான திட்டங்களை நாங்கள் தீட்டுவோம். செயல்படுத்துவோம். இதை மக்கள் நன்கு புரிந்து கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்த வேண்டும். மாற்றத்திற்கான புரட்சியை முன்னெடுக்க வேண்டும்’ என்று பேசினார்.

seithichurul

Trending

Exit mobile version