தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை திருப்பி அனுப்யிய ஆளுநர், சட்டமன்றத் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த அரசு!

Published

on

நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என தமிழக அரசு கொண்டு வந்த சட்ட முன் வடிவினை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனவரி 5-ம் தேதி, காலை 11 மணிக்குச் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வடிவு 13/9/2021 அண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்றிட ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது.

நேரில் வலியுறுத்தல்

தமிழக அரசின் இந்த சட்ட முன்வடிவை ஆளுநர் அவர்கள், ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்காத நிலையில், அதனை உடனடியாக அனுப்ப வேண்டும் என முதலமைச்சர் அவர்கள் ஆளுநரை சந்தித்து வலியுறுத்தினார். இந்நிலையில், இந்தச் சட்ட முன்வடிவை ஒன்றிய அரசுக்கு அனுப்பாத ஆளுநர், 1/02/2022-ம் தேதி அந்த சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பியுள்ளதாக வியாழக்கிழமை ஆளுநர் அலுவலகத்திலிருந்து வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீட் விலக்கு கோரும் இந்தச் சட்ட முன்வடிவானது, கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானதாக இருப்பதாகவும், கிறித்தவ மருத்துவக் கல்லூரி வழக்கில் நீட் தேர்வை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், சமூகநீதியைப் பாதுகாப்பதாகவும், ஏழை மாணவர்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதாகவும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்டமுன்வடிவைத் திருப்பி அனுப்புவதற்கான கோப்பு, ஆளுநர் அவர்களால் 1-2-2022 அன்று கையெழுத்திடப்பட்டு, 2-2-2022 அன்று மாலை தமிழ்நாடு அரசால் பெறப்பட்டது. உடனடியாக ஆளுநர் அவர்களின் கடிதம் சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களுக்கு நேற்று அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கருத்தொற்றுமை!

நீட் தேர்வானது ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானதாகவும், பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது என்பதிலும், இத்தேர்வின் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை முறை சமூகநீதிக்கு எதிரானதாக உள்ளது என்பதிலும் தமிழ்நாட்டு மக்கள், அரசியல்கட்சியினர், சமூக சிந்தனையாளர்கள் என அனைவரிடமும் அசைக்கமுடியாத கருத்தொற்றுமை நிலவி வருகிறது.

ஏற்கத்தகாத – ஆளுநரின் கருத்துகள்

இதனடிப்படையில் தான், இந்த நீட் தேர்வுமுறை நமது மாணவர்களைப் பாதித்துள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து, அவ்வாறு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அவற்றைக்களையக் கூடிய வகையில் சரியான மாற்று மருத்துவ மாணவர் சேர்க்கை முறை குறித்துப் பரிந்துரைப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. இராஜன் அவர்களின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்தக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே நீட் தேர்வு முறையிலிருந்து விலக்கு கோரும் சட்ட முன்வடிவு நமது சட்டமன்றத்தில் 13-9-2021 அன்று நிறைவேற்றப்பட்டு, அனுப்பி வைக்கப் பட்டது. இந்த நிலையில், நீட் விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவு கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்றும், நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு தெரிவித்துள்ள, இச்சட்டத்திற்கு அடிப்படையான கூற்றுகள் தவறானவை என்றும் ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள், தமிழ்நாட்டு மக்களால் ஏற்கத்தக்கவை அல்ல.

எனவே, ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து, நீட் தேர்வுபற்றிய உண்மை நிலையைத் தெளிவாக விளக்குவதோடு, இந்தச் சட்ட முன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு முன்னெடுக்கும். இது குறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட, நாளை(5-2-2022) சனிக்கிழமை காலை 11-00 மணி அளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட இந்த அரசு முடிவுசெய்துள்ளது. இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version