வணிகம்

இந்திய அரசின் நிதிப் பற்றாக்குறை இலக்கை தாண்டுமா?

Published

on

மறைமுக வரி வருவாய் குறைந்துள்ளதால் செலவுகள் குறைக்கப்பட்டு இடைக்காலப் பட்ஜெட்டில் மறு சீரமைக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை இலக்கு கட்டுக்குள் வைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்துப் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கர்க் கூறுகையில், “நடப்பு நிதி ஆண்டின் நிதிப்பற்றாக்குறை இலக்கை 3.4 சதவீதமாக வைத்திருக்க இலக்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசின் வருவாய்க் குறைந்தாலும் அதை ஈடுசெய்யும் வகையில் செலவுகளைக் குறைப்போம்.

நேரடி வரி வருவாய் குறைவாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.அதே நேரம் செலவைக் குறைக்கும் போது சேமிக்க முடியும் எனத் தனக்கு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதி ஆண்டில் நேரடி வருவாய் 12 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இடைக்காலப் பட்ஜெட்டின் போது 11.50 லட்சம் கோடியாக இலக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதில் தனிநபர் மற்றும் கார்ப்ரேட் என இரண்டு வருமான வரியும் அடங்கும்.

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 7.35 லட்சம் கோடி ரூபாயாக இலக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இது 6.43 லட்சம் கோடியாக மறு சீரமைக்கப்பட்டுள்ளது.

அன்மையில் பொதுக் கணக்குகள் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி வருவாய் குறைந்துள்ளதால் மறு சீரமைக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை இலக்கு 6.34 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என்று தெரியவந்துள்ளது.

வருவாய்க்கு அதிகமாகச் செலவு செய்யும் போது நிதி பற்றாக்குறை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version