இந்தியா

இந்திய அளவில் நெ.1 டிரெண்டிங்கில் ‘GoBackModi’- தமிழகத்தில் இப்படி ஒரு வரவேற்பா?

Published

on

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, இன்று சென்னை வருகிறார். அப்படி வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘#GoBackModi’ என்னும் ஹாஷ்-டேக் இந்திய அளவில் நெம்பர் 1 டிரெண்டிங்கில் உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் இன்று சென்னை வரும் மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கி வைக்கிறார். 

இன்று காலை 10:30 மணி அளவில் புது டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார் மோடி. பின்னர் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்குப் பக்கத்தில் இருக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சியில் 4 ஆயிரத்து 486 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் துவக்கி வைக்கிறார். மிகக் குறிப்பாக சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையும், சென்னை கடற்கரை – அத்திப்பட்டு இடையிலான நான்காவது ரயில் பாதையில் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார். 

பிரதமர் மோடியின் வருகையையொட்டி இன்று காலை 8 மணி முதல் 1 மணி வரை நகரின் முக்கிய வழித் தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

நேரு உள் விளையாட்டு அரங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, மதியம் சுமார் 2 மணி அளவில் பிரதமர் மோடி, கேரள மாநிலத்துக்குப் புறப்பட்டுச் செல்கிறார். சென்னையில் இருந்து கிளம்புவதற்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைச் சந்தித்து மோடி ஆலோசனை நடத்துவார் என்றும் தெரிகிறது. 

இந்தச் சந்திப்பின் மூலம் எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி விவபகாரம், சசிகலாவின் அரசியல் ரீ-என்ட்ரி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இப்படி மோடியின் வருகை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில் #GoBackModi #PoMoneModi, #GoBackSadistModi என்னும் ஹேஷ்-டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. 

Trending

Exit mobile version