கிரிக்கெட்

கிளவுஸ் சர்ச்சை: பிசிசிஐ, விளையாட்டு அமைச்சகம் என தோனிக்கு குவியும் ஆதரவு!

Published

on

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி வெற்றிபெற்றாலும் இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி அணிந்திருந்த கிளவுஸ் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது தோனிக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

இந்த போட்டியில் தோனி அணிந்திருந்த கிளவுஸ்சில் முத்திரை ஒன்று இடம்பிடித்துள்ளது. இது இந்திய துணை ராணுவச் சிறப்புப் படையின் முத்திரை ஆகும். இதன் அர்த்தம் தியாகம் என்பதாகும். இந்த முத்திரையை அணியத் துணை ராணுவ கமாண்டோக்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. தோனிக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் பதவி அளிக்கப்பட்டதால் அவரும் இந்த முத்திரையைப் பயன்படுத்தலாம். 2015-ஆம் ஆண்டு துணை ராணுவப் பிரிவில் தோனி பயிற்சியும் மேற்கொண்டுள்ளார்.

இருப்பினும் ராணுவ முத்திரை கொண்ட கிளவுஸ்ஸை தோனி பயன்படுத்த வேண்டாம் என ஐசிசி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை வைத்துள்ளது. ஐசிசி விதிகளின்படி ஐசிசி உபகரணங்கள் மற்றும் ஆடை ஆகியவற்றில் அரசியல், சமய, இனவாத அல்லது தேசியவாத முத்திரைகள் அல்லது குறியீடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி இல்லை. இதன் காரணமாக தோனி ராணுவ முத்திரை பதித்த கிளவுஸ்ஸை அணியக்கூடாது என ஐசிசி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை வைத்தது. இதனால் விவகாரம் சர்ச்சையாக மாறியது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் தோனிக்கு ஆதரவாக உள்ளது. இதுகுறித்து பேசிய இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய், தோனி விக்கெட் கீப்பிங் கையுறையில் பதித்துள்ள முத்திரையுடன் உலகக் கோப்பை போட்டியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என நாங்கள் ஏற்கனவே முறைப்படி ஐசிசிக்கு வேண்டுகோள் வைத்துள்ளோம்.

ஐசிசி விதிமுறைகளின்படி வீரர்கள் தனிப்பட்ட வர்த்தகம், மதம் மற்றும் இனம் சார்ந்த லோகாவை தான் பயன்படுத்தக் கூடாது. ஆனால் தோனி பயன்படுத்துவது அது சார்ந்தது இல்லை என்பது எங்களுக்கு தெரியும். மேலும் முத்திரையை அகற்ற வேண்டும் என்று ஐசிசி எங்களுக்கு வேண்டுகோள்தான் விடுத்துள்ளது. அறிவுறுத்தல் எதுவும் சொல்லவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ஐசிசி சீனியர் நிர்வாகிகளைச் சந்தித்து இது குறித்துப் பேசுவார் என்றார்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரென் ரிஜிஜூவும் இந்த விவகாரத்தில் தோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் சுரே‌‌ஷ் ரெய்னா, மல்யுத்த வீரர் யோகே‌‌ஷ்வர் தத் உள்ளிட்டோரும் தோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version