தமிழ்நாடு

டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு!

Published

on

இந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்புக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் அமமுக வேட்பாளர்களுக்கு ஒதுக்கியுள்ளது.

டிடிவி தினகரன் ஆர்கே நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார். இதனையடுத்து அந்த சின்னம் மிகவும் பிரபலமானது, தினகரன் மிகப்பெரிய வெற்றியும் பெற்றார். இதனையடுத்து இந்த தேர்தலிலும் அதே குக்கர் சின்னத்தை எங்களுக்கு பொதுச்சினமாக வழங்க வேண்டும் என தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஆனால் தினகரனின் அமமுக பதிவு செய்யப்பட்ட கட்சி இல்லை எனவே அந்த கட்சிக்கு குக்கர் சின்னத்தை பொதுச்சின்னமாக ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக கூறியது.

இந்நிலையில் பரபரப்பாக சென்ற இந்த வழக்கில் தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் கிடையாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில் தினகரனின் அமமுக வேட்பாளர்கள் அனைவருக்கும் வேறொரு தனி சின்னத்தை பொதுச்சினமாக வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியது. மேலும் தினகரனின் வேட்பாளர்கள் சுயேட்சையாகத்தான் கருதப்படுவார்கள் என்றது நீதிமன்றம்.

இதனையடுத்து தினகரனின் அமமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் வரை சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் என தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இந்த சூழ்நிலையில் பொதுச்சின்னம் வழங்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில், குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று அமமுகவுக்கு சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம் கிஃப்ட் பேக் எனப்படும் பரிசுப்பெட்டி சின்னத்தை அவர்களுக்கு ஒதுக்கியுள்ளது. இந்த பரிசுப்பெட்டி சின்னத்தில் தாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என அமமுக முக்கிய தலைவர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காலை முதலே டுவிட்டரில் பரிசுப்பெட்டி, தினகரன், அமமுக ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version