தமிழ்நாடு

வெற்றிகரமான தோல்வி போய் இந்தமுறை பெருமையுடன் தோற்றோம்: அடடே பாஜக!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது.

நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசி வருகிறது. மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையை தாண்டி முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் அதன் நிலைமை தலைகீழாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக உடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை சந்தித்த பாஜக 5 இடங்களில் போட்டியிட்டது.

கோயமுத்தூரில் சி.பி.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் பாஜக் தேசிய செயலாளர் எச்.ராஜா, இராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடியில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை, கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் என ஐந்து பேர் பாஜக சார்பில் தமிழகத்தில் போட்டியிட்டனர்.

இவர்கள் ஐந்து பேரும் தற்போதைய நிலவரப்படி பின்னடைவை சந்தித்து வருகின்றனர். தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என தொடர்ந்து எதிர் கட்சிகள் கூறிவரும் நிலையில் அதனை பிரதிபலிக்கும் விதமாகவே இந்த முன்னிலை நிலவருமும் இருக்கின்றன. நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவு அலை வீசினாலும் தமிழகத்தில் பாஜகவுக்கு இறங்குமுகமாகவே உள்ளது.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம், தனது பதிவில் கோயம்புத்தூரிலும், கன்னியாகுமரியிலும் பாஜக தங்களுடைய பெஸ்டை கொடுத்தும் இந்த முடிவு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் பெருமையுடன்தான் தோற்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

முன்னதாக பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்தபோது கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை அதனை வெற்றிகரமான தோல்வி என குறிப்பிட்டார். இது கிண்டலுக்கு உள்ளானது, அதே போல தற்போது தமிழக பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் தமிழகத்தில் பாஜக பெருமையுடன் தோற்கிறது என குறிப்பிட்டுள்ளார். இதுவும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு விருந்தாக அமையும் என கூறப்படுகிறது.

Trending

Exit mobile version