தமிழ்நாடு

பாஜகவும் வேண்டாம் அரசியலும் வேண்டாம்: விலகிய நடிகை காயத்ரி ரகுராம்!

Published

on

நடிகையும், நடன இயக்குநருமான பிக் பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

நடிகை காயத்ரி ரகுராம் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டவர். அங்கு இவரது செயல்பாடுகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதன் மூலமே மிகப்பெரிய பிரபலமானவர் காயத்ரி ரகுராம். பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட காயத்ரி ரகுராம் பிரதமர் மோடியை பாராட்டியும், காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும் தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

இடையில் பாஜக தலைமை தமிழிசை சவுந்தர்ராஜனுடன் இவருக்கு கருத்து வேறுபாடும் ஏற்பட்டது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துகளைத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்த காயத்ரி ரகுராம் தற்போது அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், வெறும் வாக்குவாதமும், மற்றவர்களைக் குற்றம் சொல்வதுமாக அரசியல் இன்று மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. குழந்தைகள் சண்டை போல உள்ளது. வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை. உருப்படியாக எதுவும் நடப்பதில்லை. மக்கள் என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. நம்மால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியுமா? எதுவும் நடப்பது போலத் தெரியவில்லை. யாரையும் ஆதர்சமாகப் பார்க்க முடியவில்லை. இப்போதைக்கு எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்து வருகிறது. நமக்காக நான் வருத்தப்படுகிறேன். முடிவில் நாம் நகைச்சுவைப் பொருளாகிவிடுகிறோம். இது எனது தனிப்பட்ட கருத்து.

சினிமாவைவிட, அரசியலில் அதிக நடிகர்கள் இருக்கின்றனர். போலியான போராளிகள், போலித் தலைவர்கள், போலித் தொண்டர்கள், போலி உறுப்பினர்கள். இதுதான் கடைசியில் கிடைக்கப் பெறுகிறோம். என்னால் 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருக்க முடியாது. நேரம் வரும்போது நான் அர்ப்பணிப்புடனும் உண்மையுடனும் விஸ்வாசத்துடனும் இருப்பேன்.

அரசியல்வாதி என்பது வில்லன் கதாபாத்திரமே. பேராசை, தந்திர புத்தி என எல்லாம் எதிர்மறை விஷயங்களே. நான் இப்போதைக்கு வெளியிலிருந்து அனைத்தையும் பார்த்து, ஆராய்ந்து, இன்னும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இன்னும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொள்கிறேன். தீவிரமாக இறங்குவதற்கான நேரம் இதுவல்ல. தேவைப்படும்போது நான் செய்கிறேன். இப்போதைக்கு நான் எந்த கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version