கிரிக்கெட்

IPL – “வாய் மட்டுந்தான்… களத்துல ஒண்ணும்மில்ல..!”- RCB-ஐ வைத்து செய்த கம்பீர்

Published

on

ஐபிஎல் தொடர்களைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சவடால் விடும் வகையில் பேச மட்டும் தான் செய்கிறது என்றும், களத்தில் அந்த அளவுக்குச் செயல்பாடு இல்லை என்றும் விமர்சித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சீசனைத் தொடங்கியிருக்கிறது கோலி தலைமையிலான ஆர்.சி.பி வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது. ஆனால் என்னதான் முதலில் வெற்றியுடன் ஆரம்பித்தாலும், பின்னர் சறுக்கல் பாதைக்குத் திரும்பிவிடும் ஆர்.சி.பி. இதன் காரணமாகத் தான் இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை ஆர்.சி.பி வென்றதில்லை.

அதே நேரத்தில் கம்பீர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குத் தலைமை தாங்கி இதுவரை இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்று தந்துள்ளார்.

இந்நிலையில் தான் கம்பீர், ‘பெங்களூர் அணியில் கெவின் பீட்டர்சன், கோலி, கிறிஸ் கெயில் போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விளையாடியும் இதுவரை கோப்பையை வெல்லவில்லை. வலுவான வீரர்களை கொண்டு வலுவான அணியாக இருக்கும் பெங்களூர் அணி களத்தில் சிறப்பாக விளையாடுவது முக்கியம். தற்போது கோலி, டிவில்லியர்சுடன் அதிரடி பேட்ஸ்மன் மேக்ஸ்வெல் இணைந்திருக்கிறார். 13 சீசன்களாக பேசிக்கொண்டே இருக்கும் பெங்களூர் களத்தில் நன்றாக விளையாடினால் தான் வெல்ல முடியும். கெய்ல், பீட்டர்சன் ஆகிய உலகத்தரம் வாய்ந்த வீரர்களை வைத்தும் கூட உள்ளூர் மைதானத்தில் தோல்வி அடைந்து இருக்கின்றனர்’ என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version