தமிழ்நாடு

கஜா புயல் நிவாரணப் பொருட்கள் வழங்கியதில் ஊழல்: தினகரன் விளாசல்!

Published

on

சமீபத்தில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் ஊழல் நடந்துள்ளதாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 27 வகையான நிவாரணப் பொருட்களைக் கொடுக்கிறோம் என்று சொன்ன தமிழக அரசு, அதை வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாகப் பத்திரிகை செய்தி வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. அரசு இயந்திரம் எந்த அளவுக்கு முறைகேடுகளுக்குத் துணைபோயுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான், நிவாரணப் பொருட்களை பேக்கிங் செய்யும் பணிக்கு அரசு ஊழியர்களை விடுத்து, சத்துணவு முட்டை ஊழலில் சிக்கிய, கிறிஸ்டி குழுமத்துக்குச் சொந்தமானது என்று சொல்லப்படும், பேக்கிங் அண்டு மூவர்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு, அப்பணி ஒதுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இப்பணியின்போது நிவாரணப் பொருட்களை மக்களுக்குக் கொடுக்காமல் பணியாளர்களே எடுத்துக்கொண்டதோடு, 42 டன் அளவு ரவை மற்றும் 20 டன் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை கள்ளத்தனமாக விற்பனை செய்துள்ளனர், இன்னும் முழுமையாக நிவாரண உதவிகள் மக்களிடம் போய் சேரவில்லை. பழனிசாமி அரசு எந்த திட்டத்தைச் செயல்படுத்தினாலும் அதில் ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகாமல் இருந்தது கிடையாது.

கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து நடுவீதியில் நிற்கும் மக்களுக்குக் கொடுக்கக்கூடிய நிவாரணப் பொருட்களில் கூடவா இந்த அரசு முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளாகும். இந்தக் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்த விரிவான விசாரணையை பழனிசாமி அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவருக்கும் அரசின் நிவாரண உதவிகள் முறையாகச் சென்று சேருவதை பழனிசாமி அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version