உலகம்

இலங்கையையும் விட்டு வைக்காத கஜா புயல்!

Published

on

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் நேற்று அதிகாலை கரையை கடந்தது. இந்த புயலினால் நாகை உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. இந்நிலையில் கஜா புயல் இலங்கையையும் விட்டு வைக்காமல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள தகவல் கிடைத்துள்ளது.

கரையை கடந்த கஜா புயல் நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த பகுதிகளில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்ப அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கஜா புயல் காரணமாக இலங்கையின் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் மழை பெய்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வடக்கு மாகணத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பள்ளிகளுக்கும் அங்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், ஊர் காவல் துறை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் உள்வாங்கியதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தரை தட்டி நின்றன. புயல் கரையை கடந்த பின்னரும் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்துவந்துள்ளது. இதனால் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளது.

பலத்த காற்று வீசியதால் வீடுகளின் மேற்கூரைகள், வேலிகள் தூக்கி வீசப்பட்டன, பெரிய பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின்சாரக் கம்பிகள் புயலினால் சேதமடைந்து யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version