தமிழ்நாடு

அரபிக் கடலில் கஜா புயல்: வானிலை மையம் தகவல்!

Published

on

நாகப்பட்டினம் மாவட்டத்தை முழுமையாக புரட்டிப்போட்ட கஜா புயல் சுற்றியுள்ள பல மாவட்டங்களையும் ஒரு கை பார்த்துவிட்டது. இந்த கஜா புயல் அரபிக் கடலுக்குச் சென்றுவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் நேற்று அதிகாலை தீவிரப்புயலாக கரையை கடந்தது. அப்போது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நாகை, திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. குறிப்பாக நாகை மாவட்டத்தின் வேதாரண்யத்தில் மிக அதிக சேதம் ஏற்பட்டது.

நேற்று நாகை, வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த கஜா புயல் திண்டுக்கல்லில் மையம் கொண்டிருந்தது. பின்னர் கேரளாவுக்கு சென்ற கஜா புயல் இறுதியில் அரபிக் கடலை அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனால், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் கஜா புயலின் தாக்கம் அதிகளவில் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கஜா புயல் அரபிக்கடலுக்குச் சென்றுள்ள நிலையில் நாளை வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி 19, 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மழை பெய்யும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version