தமிழ்நாடு

கஜா புயல் பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு: ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

Published

on

ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் இன்று அதிகாலை நாகை, வேதாரண்யத்துக்கு இடையே கரையை கடந்தது. இந்த அதிதீவிர புயலால் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் நாகை மாவட்டம் முழுவதும் பெரும் சேதத்துக்கு ஆளானது. மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து, மின்சாரம் போன்றவற்றை அடியோடு முடக்கியது. வீடுகள் மேற்கூரைகள் பறந்தன. மேலும் கஜா புயலினால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஆனந்தன், விருத்தாசலத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் அய்யம்மாள், வந்தவாசியில் மின்னல் தாக்கி பேபி அம்மாள், தஞ்சாவூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ரமேஷ், தினேஷ், சதீஷ், அய்யாதுரை, திருவண்ணாமலையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தில் பிரியாமணி ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும், சுவர் இடிந்து விழுந்ததில் சிவகங்கையைச் சேர்ந்த முத்து முருகன், முறிந்து கிடந்த மரத்தில் மோதியதில் பண்ருட்டியைச் சேர்ந்த ரெங்கநாதன் உயிரிழந்தனர். இவ்வாறு இந்த புயலால் தமிழகம் முழுவதும் 20 பேர் உயிரழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 1 லட்சமும், சிறு காயங்கள் அடைந்தவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரமும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Trending

Exit mobile version