இந்தியா

கேரளாவில் பகலிலும் ஊரடங்கு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published

on

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் கடந்த 4 நாட்களாக அம்மாநிலத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

நேற்று மட்டும் கேரளாவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,265 என்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 2.04 என்றும் கேரள அரசு அறிவித்திருந்தது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,67,497 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு நேற்று பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் நேற்று மாலை கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் அவர்கள் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தினார்.

வரும் திங்கள் முதல் அதாவது நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலாகும் என கேரள மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை அடுத்து கேரள மாநில மக்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று முழு ஊரடங்கு என்பதால் பகலிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்றும், இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேரள மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கேரளாவில் இன்று முழு ஊரடங்கு மற்றும் நாளை முதல் இரவு ஊரடங்கு என்பதால் அம்மாநில மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version