இந்தியா

இன்று முதல் டிஜிட்டல் கரன்ஸி .. எந்தெந்த வங்கிகளில் கிடைக்கும்? எப்படி பயன்படுத்தலாம்?

Published

on

சில்லறை பயன்பாட்டிற்கான டிஜிட்டல் கரன்ஸி இன்று முதல் அமலுக்கு வருகிறது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் கரன்ஸி அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் டிசம்பர் 1 முதல் டிஜிட்டல் கரன்ஸி வெளியிடப்போவதாக இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது.

முதல்கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் டிஜிட்டல் கரன்ஸி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் நாட்டில் பணத்தை நிர்வகிப்பதற்கான பெரும் செலவை குறைக்கும் நோக்கத்தில் இந்த டிஜிட்டல் கரன்ஸி வெளியிடப்படும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் உள்ள ஸ்டேட் பாங்க், ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி வங்கி ஆகிய வங்கிகளில் முதல் கட்டமாக டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுவதாகவும், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்.டி.எப்.சி வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி ஆகிய வங்கிகளில் இன்னும் ஒரு சில நாட்களில் டிஜிட்டல் கரன்ஸி அனுமதிக்கப்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் கரன்ஸிக்கும் கிரிப்டோகரன்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தனிநபர் இடையிலும் வணிகர்கள் இடையிலும் இந்த டிஜிட்டல் கரன்ஸியை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா உட்பட சர்வதேச அளவில் கிரிப்டோகரன்சி புழக்கம் அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கி பல்வேறு மோசடிகளை தவிர்ப்பதற்காக இந்த டிஜிட்டல் கரன்ஸியை வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் அச்சமின்றி இந்த டிஜிட்டல் கரன்ஸியை பயன்படுத்தலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. டிஜிட்டல் கரன்ஸி அமலுக்கு வருவதால் காகித கரன்ஸி அச்சடிக்கும் செலவு மிச்சமாகும் என்றும் இந்த டிஜிட்டல் கரன்ஸியை செல்போன் செயலி மூலமாகவும் பயன்படுத்த முடியும் என்றும் ஆன்லைன், ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இன்று முதல் வெளியாகும் டிஜிட்டல் கரன்ஸியை மக்கள் எவ்வாறு வரவேற்க போகிறார்கள்? இதன் சாதகம் மற்றும் பாதகங்கள் என்ன என்பதை வரும் நாட்களில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

Trending

Exit mobile version